990.

     எம்மை வாட்டும்இப் பசியினுக் கெவர்பால்
          ஏகு வோம்என எண்ணலை நெஞ்சே
     அம்ம ஒன்றுநீ அறிந்திலை போலும்
          ஆலக் கோயிலுள் அன்றுசுந் தரர்க்காய்ச்
     செம்மை மாமலர்ப் பதங்கள்நொந் திடவே
          சென்று சோறிரந் தளித்தருள் செய்தோன்
     நம்மை ஆளுடை நாதன்தன் நாமம்
          நமச்சி வாயங்காண் நாம்பெறும் துணையே.

உரை:

     நெஞ்சமே, எம்மை வருத்துகின்ற இப்பசியைப் போக்க எவர்பாற் செல்லலாம் என்று எண்ணி ஏங்குவது ஒழிவாயாக; அம்மம்ம, நீ ஒன்றுமே அறியாதிருக்கின்றாயே; முன்னாளில் சுந்தரர் பொருட்டுத் திருவாலக் கோயில் என்னும் திருப்பதியில் சிவந்த தாமரை போன்ற திருவடிகள் நோவுமாறு நடந்து வீடுதோறும் சென்று சோறு இரந்து கொண்டு வந்து உதவியவனும் நம்மை யாளும் நாதனுமாகிய சிவபெருமான் திருப்பெயர் நமச்சிவாயம் என்பது அறிக; அதுவே நாம் பெறத் தக்க துணையாகும். எ.று.

     மானம் குலம் முதலிய நலங்களையும் அழித்து வருத்தும் கொடுமையுடைமைபற்றி, பசி நோயை “எம்மை வாட்டும் இப்பசி” என்றும், அன்புடன் இடப்படுகின்ற சோற்றினும் வேறு மருந்து பசிநோய்க்கு இன்மைபற்றி, “எவர்பால் ஏகுவோம் என எண்ணலை” என்றும், பலவிடத்துப் பலரையும் எண்ணி மனம் அலைதலின் “அம்ம நீ ஒன்றும் அறிந்திலை போலும்” என்றும் கூறுகின்றார். சுந்தரமூர்த்திகள் வரலாற்றில் திருஆலக்கோயில் நிகழ்ச்சி நாடறிந்த ஒன்றாதலின் அதனை விதந்து, “ஆலக் கோயிலுள் அன்று சுந்தரர்க்காய்ச் சென்று சோறு இரந்து அருள் செய்தோன்” என்று எடுத்துரைக்கின்றார். உரைக்குமிடத்துச் சிவபெருமானுடைய அருமைப் பண்பு இனிது விளங்கும் பொருட்டு “செம்மை மாமலர்ப் பதங்கள் நொந்திடவே சென்று” என உரைப்பது மிக்க உருக்கமாக அமைந்துளது. மாமலர் - அழகிய தாமரை மலர். “நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே” என்று பாடிய பெருமானாதலின் சுந்தரரை இங்கே மறத்தல் கூடாமை தோன்ற, “அம்ம ஒன்றும் நீ அறிந்திலை” எனவும், “நம்மை யாளுடை நாதன் நாமம்” எனவும் நயமும் இன்பமும் அமைய நவில்கின்றார்.

     இதன்கண், நமக்கு நமச்சிவாயம் நற்றுணை யென்றும், சிவபெருமான் ஆலக்கோயிலில் சோறிரந் தளித்தருள் செய்தது விளக்கம் என்றும் தெரிந்துணர்க.

     (4)