991.

     ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின்
          ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய்
     வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ்
          வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
     வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே
          மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ
     நாடு கின்றவர் நாதன்தன் நாமம்
          நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

உரை:

     சூரியன் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றான்; அவனால் உளவாகும் காலக் கூறுகளும் அவன் பின்னே ஓடுகின்றன; இவ்வாறே நம்முடைய வாழ்வும் நாட்களாய் மாய்கின்றன; இனி அக்கொடிய நமன் வெகுண்டு வருவானாயின் என்ன செய்வோம் என எண்ணி, நெஞ்சமே, நீ வாடுகின்றாய்; அஞ்சுதல் வேண்டா; மார்க்கண்டேயர் வரலாற்றினை மறந்தனையோ? நிலைபேறு வேண்டுகின்ற பெருமக்கட்கு நாதனாகிய சிவனது திருநாமம் நமச்சிவாயம் என்று அறிக; அதுவே நாம் பெறத்தக்க துணையாம். எ.று.

     கதிரவன் - சூரியன். இமைப்போதும் எங்கும் நில்லாது தனக்குரிய நெறி பிறழாமல் இயங்கிய வண்ணம் இருத்தலின், “ஓடுகின்றனன் கதிரவன்” என்றும், இருளகற்றும் ஒளிக் கதிரன்றி உடைமை வேறு இல்லாதவன் என்பது புலப்படக் “கதிரவன்” என்றும் கூறுகின்றார். அவனது ஓட்டத்தால் நிலவுலகில் காலக்கூறுகள் உண்டாதல் பற்றி, அவற்றை “அவன்பின் காலக்கூறுகள் ஓடுகின்றன” எனவும், அது நாடறிந்த செய்தியாதலால், “தோன்றா வெழுவாய்” நிலையில் வைத்தும் உரைக்கின்றார். மண்ணக வாழ்வும் ஒவ்வொரு நாளாய்க் கழிகின்றதை எண்ணி, “ஒவ்வொரு நாளாய் வீடுகின்றன” என்றும் அதை நினைக்கிறபோது அறிஞர் உள்ளம் அவலமுற்றழிவது விளங்க, நெஞ்சின்மேல் ஏற்றி, “என்செய்வோம் இனி அவ்வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்று வாடுகின்றனை” என்றும் இயம்புகின்றார். உயிரையும் உடலையும் கூறிட்டு ஒவ்வொன்றற்குரிய காலத்தையும் கூறிட் டறுதி செய்வதுபற்றி நமனுக்குக் “கூற்றுவன்” என்றும் பெயர் வழங்குகின்றனர். வெகுளியும் காலம்கருதும் கடுமையும் அவன்பால் இலவாயின் உலகியல் உயிர்த்தொகை சமனிலை எய்தா தெனத் தெளிக. மண்ணக வுயிர்கட்குக் காலமறிந்து வாழ்வை முடிவு செய்தல் இறைவன் ஆணை. அதுபற்றியே அவனைச் சான்றோர் “காலக் கடவுள்” என்றனர்; அருளறம் வேண்டி விதிகட்கு விலக்கு உளதாவது முறைமை என்பது தோற்றுவித்தற்கு மார்க்கண்டேயர் வரலாறு வழங்கி வருகிறது. மார்க்கண்டேயர் செய்து போதருகின்ற சிவவழிபாட்டிற் கிடையே அவரது வாழ்நாள் முடிந்தமையின், கூற்றுவன் உயிர் கொள்வான் வெகுண்டு வந்தனனாயினும், உயிர் கோளினும் சிவ வழிபாடு சிறப்புடைத்தெனப் பொருள்கொள்ளும் முறையில் மார்க்கண்டேயர் வரலாறு மாண்புற்றமை காட்டற்கு “மார்க்கண்டேயர்தம் மாண்பறிந்திலையோ” என்று உரைக்கின்றார். சிவ வழிபாட்டின்கண் உள்ள இச்சை மிகுதியால் வாழ்நாள் மிகைபட வேண்டுவோர் உளராதலின், அவர்கட்கும் தலைவன் சிவனே என்பது இனிது விளங்க “நாடுகின்றவர் நாதன்தன் நாமம்” என்று நவில்கின்றார்.

     இதன்கண், நமச்சிவாயம் நாம் பெறும் நற்றுணை என்பதனால் நற்றுணைப் பேறும், “மார்க்கண்டேயர் தம் மாண்பு” கூறுதலால், துணை பெறற்கு இன்றியமையாத விளக்கமும் உரைத்தவாறாம்.

     (5)