992.

     மலங்கும் மால்உடல் பிணிகளை நீக்க
          மருந்து வேண்டினை வாழிஎன் நெஞ்சே
     கலங்கு றேல்அருள் திருவெண்ணீ றெனது
          கரத்தி ருந்தது கண்டிலை போலும்
     விலங்கு றாப்பெரும் காமநோய் தவிர்க்க
          விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா
     நலங்கொள் செஞ்சடை நாதன்தன் நாமம்
          நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

உரை:

     என் நெஞ்சமே, வருந்துகின்ற பெரிய உடலிடத்துண்டாகும் பிணிகளை நீக்குதற்கு மருந்து வேண்டினை யாதலின் வாழ்க; கலக்க முறல் வேண்டா; திருவருள் மயமான திருவெண்ணீறு என்னுடைய கையில் உளது; அதனை நீ பார்த்திலை போலும்; விலக்குதற்கு அரிய பெரிய காம நோயைப் போக்குதற்கு விரும்பி ஏக்கம் எய்துகின்றாய்; மனம் வெம்மையுற வேண்டா; அழிதல் இல்லாத நன்மை பொருந்திய சிவந்த சடையையுடைய நாதனாகிய சிவனது நாமம் நமச்சிவாயமாம்; அது நாம் பெறுதற்குரிய துணையாம், எ.று.

     மலங்குதல் - வருந்துதல்; புழு பூச்சிகளால் அரிக்கப்படுதலுமாம். காளைப் பருவத்தின் மிக்கவிடத்து உடல் பருத்து வலிமை யுற்றிருத்தலால், “மாலுடல்” என்று குறிக்கின்றார். உடல் பெருக்கப் பெருக்க நோயும் பெருகுதலின் “மாலுடற் பிணிகளை நீக்க” எனப் பன்மை வாய்பட்டால் உரைக்கின்றார். நோய் எய்திய போது மருந்து நாடுவது இயல்பாதலின் “மருந்து வேண்டினை” என்றும், மருந்து கொடாமை தீது என்பது பற்றி, “வாழி என் நேஞ்சே” என்றும் உவந்துரைத்து, அதற்கென மருந்தாகிய திருநீறு தம்பால் இருந்தமை கூறி மகிழ்கின்றமை புலப்படக் “கலங்குறேல் அருள் திருவெண்ணீறு எனது கரத்திருந்தது” என்றும், “கண்டிலை போலும்” என்றும் கனிந்துரைக்கின்றார். இனம் பெருகுதல் குறித்து ஆண் பெண்ணையும், பெண் ஆணையுறும் காமுறும் காமவிச்சை விலக்குதற்கரிய தன்மை தோன்ற, “விலங்குறாப் பெருங் காமநோய்” என்றும், அதன் வழியாகத் துன்பங்கள் உளவாதல் கண்டு அறிஞர் மிகவும் அஞ்சி அதனைத் தவிர்க்க முயன்று மிக்க இடும்பைக் குள்ளாகி யிருத்தலின், “காமநோய் தவிர்க்க விரும்பியேங்கினை” என்றும், மாட்டாமை பற்றி உண்டாய மன நோயைப் போக்கற்கு “வெம்புறேல்” என்றும் உரைக்கின்றார். காமநோயைக் கடந்தவர் கண்ணுதற் கடவுளல்லது பிறர் இல்லாமையால், அவரை “அழியா நலங்கொள் செஞ்சடை நாதன்” என்றும், அவர் திருப்பெயரை “நமச்சிவாயம்” என்றும் உரைக்கின்றார்.

     இதனால், நற்றுணையாவது நமச்சிவாயம் என்றும், உடல்நோய்க்கு அவனது திருநீறு மருந்தாம், காமநோய்க்கு அவன் திருநாமம் துணையாம் என்றும் விளக்கம் செய்தவாறு.

     (6)