993. மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான்
மற்றை வானவர் முற்றிலும் அழிவார்
ஏலும் நற்றுணை யார்நமக் கென்றே
எண்ணி நிற்றியோ ஏழைநீ நெஞ்சே
கோலும் ஆயிரம் கோடிஅண் டங்கள்
குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்
நாலு மாமறைப் பரம்பொருள் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
உரை: திருமாலும் பிரமனும் இறந்தொழிவர்; மற்றைய தேவர்கள் அனைவரும் அழிவர்; ஏலும் வகையில் நமக்கு நல்ல துணையாவார் யாவர் என்று நினைந்து ஏங்கி நின்றனை போலும்; நெஞ்சே நீ மிக்க ஏழையாவாய்; வகை வகையாக அமையும் ஆயிரம்கோடி யண்டங்களை நிலைகுலைய அழித்தும், படைத்தும், காத்தளித்தும் விளங்கும், நான்கு மாமறைகளும் ஓதும் பரம்பொருளாகிய நாமம் சிவத்தின் நமச்சிவாயம்; அதுவே நாம் பெறத்தக்க நற்றுணை. எ.று.
உலகங்களைக் காக்கும் கடவுள் எனப்படும் திருமாலும் நிலைத்த பரம்பொருளல்லர்; அவரும் ஒருநாள் அழிபவரே என்றற்கு “மாலும் துஞ்சுவன்” என்றும், பூமேல் உறையும் பிரமனும் படைப்புக் கடவுள் எனப்படினும் இறத்தற்குரியவன் என்றற்கு “மலரவன் இறப்பான்” என்றும், இவர்களின் ஆதரவு பெற்று வாழும் தேவருள் எவரும் அழியாவியல்பினரல்லர் என்பது புலப்பட “மற்றை வானவர் முற்றிலும் அழிவர்” என்றும், நெஞ்சம் அறிந்து நிலை கலங்குகின்றது. அழிவின்றி யிருந்து துணை புரியத்தக்க நல்ல துணையே நாடுமாறு தோன்ற, “ஏலும் நற்றுணையார் நமக்கு என்றே எண்ணி” என்றும், தாம் வீழ்வார் பிறர்க்கு ஊன்றுகோலாம் துணையாகார் என்ற முறைமையை நோக்கின் தனக்கு அழியாத் துணையாவார் ஒருவரும் இன்மை கண்டு நிலையழிவது பற்றி, “எண்ணி நிற்றியோ ஏழை நீ நெஞ்சே” என்றும் வருந்திக் கூறுகின்றார். அறிவாகிய தக்க துணையின்மை பற்றி “நீ ஏழை” எனல் பொருந்துவதாயிற்று. கோலுதல் - திட்டமிடுதல். அண்டம் ஆயிரத்தெட்டு என்றாற்போல் தொகைவகை கோலுவது கண்டு “கோலும் ஆயிரம் கோடி அண்டங்கள்” என உரைக்கின்றார். ஆயிரம், கோடி என்றது எண்ணிறந்த பல என்னும் பொருண்மை குறித்தது. அண்டங்களை எண்ணிய மணிவாசகனார், அவை, “நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” என்று கூறுவர். அழியுங்கால் நிலையும் இயல்பும் ஒருங்கு கெடுதலின் “குலைய நீக்கியும்” என்றும், நீக்கியும் ஆக்கியும் என்றதற் கேற்பக் காத்தும் அளித்தும் என விரித்துரைத்தல் வேண்டிற்று. நான்மறையும் பல்வேறு தெய்வங்களை யுணர்த்தலின், அவற்றின் வேறாய சிவபரம்பொருளை, “நாலு மாமறைப் பரம்பொருள்” என்று குறிக்கின்றார்.
இதனால், நமச்சிவாயமே நற்றுணை என்பதும், அண்டங்களைக் குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும் பரம்பொருள் என்றது விளக்கமென்பதும் அறிக. (7)
|