994. கந்த வண்ணமாம் கமலன்மால் முதலோர்
எண்டி லார்எனில் கைலையம் பதியை
எந்த வண்ணம் நாம் காண்குவ தென்றே
எண்ணி எண்ணிநீ ஏங்கினை நெஞ்சே
அந்த வண்ணவெள் ஆனைமேல் நம்பி
அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
நந்தம் வண்ணமாம் நாதன்றன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே
உரை: நெஞ்சமே, நறுமணமும் அழகுமுடைய தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் பிறரும் கயிலையம்பதியைச் சென்று கண்டிலர் என்றால், அதனை நாம் சென்று காண்குவதென்பது எவ்வாறாம் எனப் பலப்பட எண்ணி நீ ஏங்கி வருந்துகின்றாய்; சிவபிரான் அனுப்பிய அந்த அழகிய வெள்ளை யானைமேல் இவர்ந்து நம்பியாரூரர் சென்ற வரலாற்றினை நீ அறிவாயன்றோ? நம் வண்ணமாகிய சிவபிரான் நாமம் நமச்சிவாயம் ஆகும்; அதுவே நாம் பெறற்குரிய துணையாம். எ.று.
கந்தம் - நறுமணம்; வண்ணம் - அழகு. தாமரைக்குக் கமலம் என்று பெயராதலால், தாமரையிலுள்ள பிரமனைக் “கமலன்” என்றார். தாமாக விரும்பிச் சென்று காண்பதன் அருமை புலப்படுத்தற்குக் “கமலன் மால் முதலோர் கண்டிலர்” என்று குறிக்கின்றார். தேவர் தேவர்களான இவர்களாலேயே காண்பதருமையாயின் மக்களாயினார் காண்பதென்பது இயலாத செயலாம் என உணர்த்தற்குக் “கயிலையம் பதியை எந்த வண்ணம் நாம் காண்குவதென்றே எண்ணி எண்ணி நீ ஏங்கினை” என்று இயம்புகின்றார். பன்னாளும் முறையும் எண்ணினமை தோன்ற, “எண்ணி எண்ணி நீ ஏங்கினை” என அடுக்கி யுரைக்கின்றார். “விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான்” என்றும், “தொண்டனேன் பரமல்ல தொரு வேழம் அருள் புரிந்தான்” என்றும், “பரமல்லதொரு வெஞ்சின ஆனை தந்தான்” என்றும் விதந்து விளம்பினதெண்ணிப் பாடுமாறு தோன்ற, “அந்த வண்ண வெள்ளானைமேல் நம்பியமர்ந்து சென்றதை யறிந்திலை போலும்” என்று உரைக்கின்றார். தன்னைக் காண்பவர் காணுமளவிற்குக் காட்சி நல்கியருளும் சிவனது பேரருளுடைமையைப் பாராட்டி, “நந்தம் வண்ணமாம் நாதன்” என்று பரிந்துரைக்கின்றார். சேரமான் பெருமாளும், இவ்வருட் டிறத்தை, “தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே” (பொன். 1) என்று புகன்று கூறுவது காண்க.
இதன்கண், நாம் பெறும் துணை நமச்சிவாயம் என்று கூறி, கயிலை காண வெள்ளை யானை தந்து விடுத்த செய்தியை விளக்கமாகக் காட்டியவாறாம். (8)
|