995. வீர மாந்தரும் முனிவரும் சுரரும்
மேவு தற்கொணா வெள்ளியங் கிரியைச்
சேர நாம்சென்று வணங்கும்வா றெதுவோ
செப்பென் றேஎனை நச்சிய நெஞ்சே
ஊர னாருடன் சேரனார் துரங்கம்
ஊர்ந்து சென்றவ் உளவறிந் திலையோ
நார மார்மதிச் சடையவன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
உரை: வீரம் மிக்க ஆடவரும் முனிவரும் தேவர்களும் சென்றடைய வொண்ணாத வெள்ளிமலையைச் சென்று சேர்ந்து நாம் வணங்கும் நெறியாதாம் சொல்லுக என்று பன்முறை விடாது வினவிய நெஞ்சமே, நம்பியாரூரர் கயிலை சென்றபோது அவருடன் சேரமான் பெருமாள் குதிரை யூர்ந்து சென்ற அவ்வுபாயத்தை நீ மறந்தாய் போலும், கங்கையாற்றுடன் சந்திரன் தங்குகின்ற சடையுடைய சிவனது நாமம் நமச்சிவாயமாம்; அதுதான் நாம் பெறற்குரிய துணையாம். எ.று.
புலன்கள்மேற் செல்கின்ற அவாவத்தனையும் வென்றடக்கிய வீரம் செறிந்த நல்லாடவர்களை “வீரமாந்தர்” எனவும், முனிவர்களாகிய முதல்வர்களை “முனிவர்” எனவும், தேவர்களைச் “சுரர்” எனவும் குறிக்கின்றார். வெண்பனி மூடிய நெடுமலையாகிய வெள்ளிமலையை யடைந்து சிவபெருமானை வணங்கி வழிபடுவதென்பது மேற்கூறிய வீரமாந்தர் முதல் சுரர் ஈறாகவுள்ள பலர்க்கும் அரிதென்பது உலகறிந்த செய்தியாதல் தோன்ற, “வீரமாந்தரும் முனிவரும் சுரரும் மேவுதற் கொணா வெள்ளியங்கிரி” என்று விளம்புகின்றார். இவ்வாறு வெள்ளிமலையின் அருமை கூறிய நெஞ்சம், எங்ஙனமேனும் சென்று வணங்க வேண்டுமென்று மிக்கெழுந்த ஆர்வத்தால் நச்சரித்த செயலை, “வெள்ளியம்கிரியைச் சேர நாம் சென்று வணங்குமாறு எதுவோ என்று எனை நச்சிய நெஞ்சே” என்று கூறுகின்றார். நச்சரித்தல் - நெருங்கியிருந்து பன்முறையும் சொல்லிச் சொல்லி வற்புறுத்தல். அவ்வெள்ளி மலைக்குச் சேறல் அரிதன்று; நம்பியாரூரர் யானை யிவர்ந்து வெள்ளிமலை நோக்கிச் சென்றது தெரிந்து சேரமான் பெருமாள் குதிரையேறி அதன் செவியில் திருவைந்தெழுத்தை யோதி விடுக்கவும், அக்குதிரை ஆரூரர் சென்ற யானைக்குக் காவல் புரிந்துகொண்டு கயிலை சென்று சேர்ந்தது. இதனை, “விட்ட வெம்பரிச் செவியினுள் புவிமுதல் வேந்தர் தாம் விதியாலே இட்டமாம் சிவமந்திர மோதலின் இருவிசும்பெழப் பாய்ந்து, மட்டலர்ந்த பைந்தெரியல் வன்தொண்டர் மேல்கொண்ட மாதங்கத்தை, முட்ட எய்தி முன்வலங்கொண்டு சென்றது மற்றதன் முன்னாக” (பெரிய. வெள். 36) என்று சேக்கிழார் பெருமான் தெரிவிக்கின்றார். இதனைக் கருத்திற் கொண்டுதான், “ஊரனாருடன் சேரனார் துரங்கம் ஊர்ந்து சென்ற அவ்வுளவறிந் திலையோ” என்று வடலூர் வள்ளல் வடித்துரைக்கின்றார்.
இதன்கண், நமச்சிவாயம் நாம் பெறும் துணையென்பது துணை கூறல்; சேரனார் துரங்கம் ஊர்ந்துசென்ற அவ்வுள வறிந்திலையோ என்றது விளக்கம் கூறல். (9)
|