996.

     தலங்கள் தோறும்சென் றவ்விடை அமர்ந்த
          தம்பி ரான்திருத் தாளிணை வணங்கி
     வலங்கொ ளும்படி என்னையும் கூட
          வாஎன் கின்றனை வாழிஎன் நெஞ்சே
     இலங்கள் தோறும்சென் றிரந்திடும் அவனே
          என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு
     நலங்கொ ளும்துணை யாதெனில் கேட்டி
          நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

உரை:

     திருப்பதி தோறும் சென்று ஆங்கு எழுந்தருளும் சிவபிரான் திருவடியிணைகளை வணங்கி வலங்கொண்டு வழிபடுதற்கு என்னையும் உடன் வருக என அழைக்கின்றாய்; என்னுடைய நெஞ்சமே, நீ வாழ்க; வீடுதோறும் சென்று உண்பலி இரக்கும் அப் பரமனே என்னையும் உன்னையும் சேர்த்து இழுக்கின்றான்; அச் செயற்கு நல்ல வெற்றி பயக்கும் துணையாவது யாதெனில் கேட்பாயாக; அது நமச்சிவாயம் என்பது; அதுவல்லது நாம் பெறலாவதொரு துணை வேறில்லை. எ.று.

     தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபடுவது சரியை என்றும், அங்குள்ள சிவனை மலரிட்டு அருச்சிப்பது கிரியை என்றும் சிவாகமங்கள் தெரிவிக்கின்றன. அதனால் சரியை முதலிய தவம் மேற்கொள்ளக் கருதும் நெஞ்சினை வாழ்த்தி, “தலங்கள் தோறும் சென்றவ் விடையமர்ந்த தம்பிரான் திருத்தாளினை வணங்கி வலங்கொளும்படி என்னையும்கூட வா என்கின்றனை” என்று கூறுகின்றார். தலம் தோறும் கோயில் கொண்டருள்பவன் சிவபெருமான் ஒருவனே என்பது விளங்க, “தலங்கள் தோறும் சென்று அவ்விடை அமர்ந்த தம்பிரான்” என்று இயம்புகின்றார், தலம் பலவாயினும் கோயில் கொள்ளும் சிவன் ஒருவனே என்பதாம்; இதனை, “உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன் ஒற்றியூர் உறையும் அண்ணாமலை யண்ணல்” என்று ஞானசம்பந்தர் உரைப்பதனாலும் அறிகின்றோம். தலந்தோறும் சென்று வருவது சரியை; வழிபடுவது கிரியை. நெஞ்சம் துணையாகா வழி எடுத்த செயல் யாதும் கடைபோகாமை பற்றி, “என்னையும் கூடவா என்கின்றனை” என்று நெஞ்சினை வாழ்த்துகின்றார். நெஞ்சினைத் தாம் ஒருப்படுக்க வேண்டியிருப்ப, அது தானே முற்பட வந்து அழைப்பது மேற்கொண்ட தவம் முற்றுப் பெறுவதற்கு இனிய வாய்ப்பு என்பதாம். இல்லங்கள் தோறும் பலி வேண்டிச் செல்வது சிவபிரான் செயற்பண்பு; அவன் அதனைச் செய்வது அடியார்க்கு அருள்புரியும் திறம் என்பர், “மணமுலாம் அடியார்க்கு அருள் புரிகின்ற வகையலால் பலி திரிந்து உண்பிலான்” என்று ஞானசம்பந்தர் நவில்கின்றார். அத்தகைய பெருமான் தானே வருமாறு மனமுவந்து நம்முடைய கருத்தை ஈர்க்கின்றான் எனின், அதனிற் சிறப்புடைய பேறு வேறு இல்லை; இதனை முற்றுவித்துக் கோடற்கு உரிய நெறி அப் பெருமான் திருப்பெயராகிய நமச்சிவாயத்தைத் துணையாகப் பற்றுவ தென்பர்; “நலம் கொளும் துணையா தெனில் கேட்டி நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே” என்றும் அறிவிக்கின்றார்.

     இதனால், நமச்சிவாயம் நல்ல துணையென்றும், அன்பர் இல்லம் தோறும் சென்று பலியிரக்கும் பெருமான் தானே அருள்கூர்ந்து நம்மை ஈர்ப்பது அரியதொரு செயல் என்பது விளக்கம் என்றும் அறிக.

     (10)