38. சிவபுண்ணியத் தேற்றம்

திருவொற்றியூர்

    மக்கள் செய்யும் நல்வினை யாவும் புண்ணிய மென்ற வடசொல்லாற் குறிக்கப்படும். எதிர்பயன் கருதாமற் செய்யப்படும் நல்வினையும், எவ்வுயிர்க்கும் துன்பம் பயவாமல் இன்பமே விளைவிக்கும் நல்வினையும் உலகில் உண்டு. அவற்றையும் வடநூலார் புண்ணியமென்பர். இப் புண்ணியங்களில் சிவபுண்ணியம் என்பன யாவை? எவ்வுயிரும் ஈசன் உறையும் இன்பவுறையுளாகலின், வேறுபாடின்றி எவ்வுயிர்க்கும் செய்யும் நல்வினைகள் சிவபுண்ணியங்களே யாகும். அன்றியும், சிவபரம்பொருள் ஒன்றையே எண்ணி, அதன் உயரிய பெயர்களையே மொழிந்து, அதன் மூர்த்தத்துக்கு நீராட்டல், பூச்சூட்டல் முதலிய திருப்பணிகளைப் புரிவதும் சிவபுண்ணியம் எனப்படுகின்றன. சிவனை நினைந்து திருநீறணிவதும், திருவக்குமணி பூண்பதும், சிவனுக்குரிய திருவைந்தெழுத்தையே ஓதுவதும் சிவபுண்ணியமாகும்.

    ஈண்டுச் சிவனடியார் கொள்ளும் வேடங்களை மேற்கொண்டணிவது சிவபுண்ணியம் எனச் சிறப்பிக்கப்படுகிறது. “துளக்க மில்லாதன தூய தோற்றத்தன, விளக்கமாக்குவ்வன வெறிவண்டாரும் பொழில், திளைக்கும் தேவன் குடித் திசை முகனோடுமால், அளக்க வொண்ணா வண்ணத் தடிகள் வேடங்களே” (திருந்து) என்று ஞானசம்பந்தரும், “மாலறநேய மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” (சிவ. போ. 12) என மெய்கண்டாரும் உரைத்தலால், அஃது உண்மையாதல் தெளிவாகிறது.

    சிவவேடம் பூண்பதும், பூண்டாரைப் போற்றிச் சிறப்பிப்பதும், இன்ன பிறவும் சிவபுண்ணியமாதலை யாவரும் இனிதறிந்து தெளிந்து மேற்கோடற் கருத்தாக இப்பத்து முழுதும் பாட்டுக்கள் கிடந்து மிளிர்வது பற்றி, இது சிவபுண்ணியத் தேற்றம் என்ற பெயர் கொண்டு பிறங்குகிறது. இதனைக் கற்றுணரும் உள்ளம் சிவப்புண்ணியத்தின்கண் உறைப்புறுவதை யாவரும் படித்துத் தெரிந்து கோடல் சீரிது.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

997.

     கடவுள் நீறிடாக் கடையரைக் கண்காள்
          கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக
     அடவுள் மாசுதீர்த் தருள்திரு நீற்றை
          அணியும் தொண்டரை அன்புடன் காண்க
     தடவும் இன்னிசை விணைகேட் டரக்கன்
          தனக்கு வாளொடு நாள்கொடுத் தவனை
     நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய
          நாதன் தன்னைநாம் நண்ணுதற் பொருட்டே.

உரை:

     கண்களே, கடவுளாகிய சிவனுக்குரிய திருநீற்றை யணியாத கீழ்மக்களை, கனவினும் காண்பதை யொழிவீர்களாக உள்ளத்திற் படியும் அழுக்கினைக் கெடத் தீர்த்துதவும் திருநீற்றை அணிந்துகொள்ளும் தொண்டர்களையே அன்புடன் காண்பீர்களாக; இவை செய்யச் சொல்வது, கைவிரலால் தடவி இன்னிசை யெழுப்பும் வீணையை இசைத்துப் பரவிய அரக்கனாகிய இராவணனது இசைக்கு மகிழ்ந்து போர்வாளும் வாழ்நாளும் கொடுத்தவனும், அறத்தை நடத்தும் திருமாலாகிய ஏற்றூர்தியையும் திருவொற்றியூரையும் உடையவனும், நமக்கெல்லாம் நாதனுமாகிய சிவபெருமானை நாம் அடைதற் பொருட்டேயாம். எ.று.

     பார்வைக்குட்பட்ட பொருள்கள் அத்தனையும் வேறறக் காணும் இயல்புடையவாதலின் ஈண்டுக் கண்களாகிய கருவிகளை எடுத்து மொழிகின்றார். கண்ணால் பெறப்படும் காட்சி நிருவிகற்பம், சவிகற்பம் என இருதிறமாயினும், நிருவிகற்பம் பொதுவும், சவிகற்பம் சிறப்பும் தெளிவுமுடையவாம். உணர்வு ஒன்றியவழிச் சவிகற்பமும், அல்லா விடத்து நிருவிகற்பமும் எய்தும்; சவிகற்பமோ நிருவிகற்பமோ யாதும் கூடாதென்றற்குக் “கண்காள் கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக” என்று கூறுகின்றார். காணத்தக்கவரல்லர் எனற்குக் “கடையர்” என்றும், கடைமை எய்தியதற்குக் காரணம் நீறணியாமை என வற்புறுத்தற்கு “நீறிடாக் கடையர்” என்றும், தத்துவாதீதனாகிய சிவபெருமான் அணியும் சிறப்புடையதென்றற்குக் “கடவுள் நீறு” என்றும் கூறுகின்றார். கடையூழிக் காலத்தில் எப்பொருளும் அழியுங்கால் திருநீறு ஒன்றே கெடாது நிற்பது பற்றி, “கடவுள் நீறு” என்றார் என்றுமாம். நனவெல்லை கடந்த சூழ்நிலை கனவாயினும் நெஞ்சிற் கிடந்தது உறக்கத்தில் தோன்றற் கிடமாதலின், கனவினை எடுத்து மொழிகின்றார். “நெடுவரை மருங்கில் துஞ்சும் யானை, நனவில் தான் செய்தது மனத்ததாகலின், கனவிற் கண்டு கதுமென வெரீஇ” (கலி. 49) என்று சான்றோர் கூறுவது காண்க. திருநீற்றின் சிறப்பைக் கூறுபவர், உள்ளத்திற் படியும் மாசு தீர்த்து உய்விப்பது திருநீறு என்ற கருத்துப் புலப்பட, “உள்மாசு அடத் தீர்த்து அருள் திருநீறு” என்று உரைக்கின்றார். கண் முதலிய அறிகருவி கொண்டு அறிவதும், கைவாய் முதலிய செய்கருவி கொண்டு செய்வன செய்வதும், மனமொழி மெய் முதலிய உட்கருவி கொண்டு நினைவதும் மொழிவதும், செய்வதும் நிகழ்வதால் மனத்தின்கண் மாசுகள் படிவதுபற்றி, “உள்மாசு அடத்தீர்த்தருள்வது” என மொழிகின்றார். அடுதல் - பற்றறக் கெடுதல். நாளும் கணந்தோறும் சேரும் மாசுகளைப் போக்குவது மனமுதலிய கருவிகளைத் தூய்மை செய்து நல்வாழ்வு வாழ வுதவுமென்பது பற்றி, இவ்வகையில் திருநீறு வீறுமிக்கதென ஞான நூல்கள் ஓதுகின்றன. இதனை, “உண்மாசு கழுவுவது நீறு என்றே உபநிடதம் உரைப்பக் கேட்டும்” (விருத்த. 16) என்று பரஞ்சோதியார் திருவிளையாடல் தெரிவிப்பது காண்க. சிவத்தொண்டர் திருநீற்றை அணியாகக் கோடல்பற்றித் “திருநீற்றை அணியும் தொண்டர்” என்று தெரிவிக்கின்றார். வீணை யிசைப்பது கைவிரல்களால் நிகழ்வது பற்றி, “தடவும் இன்னிசை வீணை” என்று இயம்புகின்றார். “மிக நல்ல வீணை தடவி” எனச் சிவனைத் திருஞான சம்பந்தர் பாராட்டுகின்றார். அரக்கன் என்றது இராவணனை; அவன் இசை பாடிப் போர்வாளும் நெடிய வாழ்நாளும் பெற்ற திறத்தைத் தேவாரத் திருப்பதியங்கள் முழங்குகின்றன.

     கடவுள் நீறிடாதவரைக் காணாதொழிவதும், திருநீறணியும் தொண்டரைக் கண்டு பரவுவதும் சிவபுண்ணியம்; ஒற்றியூருடைய நாதன் தன்னை நண்ணுவது சிவபுண்ணியத்தின் தேற்றம் என அறிக.

     (1)