998. போற்றி நீறிடாப் புலையரைக் கண்டால்
போக போகநீர் புலமிழந் தவமே
நீற்றின் மேனியர் தங்களைக் கண்டால்
நிற்க நிற்கஅந் நிமலரைக் காண்க
சாற்றின் நன்னெறி ஈதுகாண் கண்காள்
தமனி யப்பெரும் தனுஎடுத் தெயிலைக்
காற்றி நின்றநம் கண்நுதற் கரும்பைக்
கைலை ஆளனைக் காணுதற் பொருட்டே.
உரை: திருநீற்றினை விரும்பி நெற்றியிலும் மேனியிலும் அணிந்து கொள்ளாத புலையரைக் கண்டால் அவர்களை நெருங்காது விலகிச் செல்க, பார்க்கும் புலமிழந்து வெறிதே சேணிற் செல்க; திருநீறணிந்த நன்மேனி யுடையவர்களைக் கண்டால் கண்டவிடத்தே நிலைத்து நிற்க; நின்று அத் தூயவரைக் கண்களால் நன்கு காண்க; கண்களே, உமக் குரியவென்ற நன்னெறியாவது சொல்வதாயின் இதுவேகாண்; பொன் மலையாகிய பெரிய வில்லையெடுத்து முப்புரத்தவர் மதில்களை எரித்தழித்து நின்ற நமது கண்ணுதற் பெருமானாகிய கரும்பு போல்பவனும் கயிலை மலையாள்பவனுமாகிய சிவனைக் காண்டற் பொருட்டு இது வேண்டப்படுகிறது காண். எ.று.
நீறு போற்றி யிடாப் புலையர் என இயையும். போற்றல், ஈண்டு விரும்புதற் பொருட்டு. நீற்றினைப் போற்றி யணியாத வுடம்பு வெறும் புலால் நாறும் உடம்பாதலின் அதனை யுடையாரைப் “புலையர்” என வெறுக்கின்றார். புலம் இழந்து அவமே போக போக என மாறுக. புலம் - கட்புலனால் காண்டல். காண்டற்குரிய வற்றைக் காணாமை அவமாகலின், காணாது செல்க என்பார், “நீபுலம் இழந்து அவமே போக போக” எனப் புகல்கின்றார். நெடுஞ்சேணில் விலகிச் செல்க என்றற்குப் போகப்போக என அடுக்கினார். கண் காணினும் காட்சி நிகழாமைப் பொருட்டு “அடுக்கு” வேண்டப்பட்டது போலும். நீற்றின் மேனியர், திருநீறணிந்த உடம்புடையவர். நீறணிந்த மேனி வெண்ணீறு சண்ணித்த மேனியையுடைய சிவனைக் கண்டாற்போலும் செம்மை நிலைமை நல்குதலால், “நீற்றின் மேனியர் தங்களைக் கண்டால் நிற்க நிற்க” என வற்புறுத்துகின்றார். நீறணிந்தமையின் மேனி சிவமாம் செம்மையும் தூய்மையும் எய்துதலால் நீறணிந்தாரை, “நிமலர்” என்றும், அவரைக் காண்பது சிவத்தைக் காண்பது போலும் நலம் விளைவிப்பது உணர்த்த, “அந் நிமலரைக் காண்க” என்றும் உரைக்கின்றார். காண்டல் கண்கட்குத் தொழில் எனினும், அதனைச் செய்தற்குரிய நன்னெறி இதுவென்பாராய், “சாற்றின் நன்னெறி ஈது காண், கண்காள்” என இயம்புகின்றார். நீறணிவதும், நீறணிந்தாரை நின்று கண்டு இன்புறுவதும் விளைவிக்கும் பயன் இதுவென விளக்குதற்குக் “கண்ணுதல் கரும்பைக் கயிலை யாளனைக் காணுதற் பொருட்டு” என்று கூறுகின்றார். தமனியம், ஈண்டுப் பொன்மலை மேற்று. காற்றுதல் - அழித்தல்.
இதனால், நீறணிந்தாரை நிமலர் என்றும், அல்லாரைப் புலையர் என்றும், நிமலரைக் கண்டு பரவுக என்றும் கூறுவது சிவபுண்ணியம். கயிலை யாளனைக் காணுதற் பொருட்டென்றது அப்புண்ணியத்தின் தேற்றம் என்றும் கூறியவாறாம். (2)
|