999. தெய்வ நீறிடாச் சிறியரைக் கண்டால்
சீறு பாம்புகண் டெனஒளித் தேக
சைவ நீறிடும் தலைவரைக் கண்காள்
சார்ந்து நின்றுநீர் தனிவிருந் துண்க
செய்ப வன்செய லும்அவை உடனே
செய்விப் பானுமாய்த் தில்லைஅம் பலத்துள்
உய்வ தேதரக் கூத்துகந் தாடும்
ஒருவன் நம்முளம் உற்றிடற் பொருட்டே.
உரை: கண்களே, தெய்வத் தன்மை பொருந்திய நீற்றினை நெற்றியிற் பூசாத சிறுமை யுடையவரைக் காண்பீராயின், சீறுகின்ற பாம்பைக் கண்டாற்போல அஞ்சி அவர்கள் கண்ணில் படாது மறைந்து செல்வீராமின்; சிவ சம்பந்தமுடைய திருநீற்றை யணியும் தலைமைப் பண்புடையாரைக் காணின், அவரைச் சார்ந்து அவரோடிருந்து தனி விருந்து உண்பதும் செய்க; செய்பவன், செயல், அவற்றோடு செய்விப்பவன் ஆகிய முத்திறமாய்த் தில்லையம்பலத்துள் உயிர்கள் உய்திபெறல் வேண்டித் திருக்கூத்தாடும் ஒப்பற்ற பெருமான் நமது உள்ளத்தை இடமாகக் கொண்டு எழுந்தருளும் பொருட்டு. எ.று.
சிவபெருமான் முதல் மேலுலகத் தேவர்கள் உட்படத் தேவர் பலரும் அணிவது பற்றித் “தெய்வ நீறு” என்றார். “மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு” என்பர் ஞானசம்பந்தர். தெய்வ வருள்பெற விரும்புபவரும் பெற்றவரும் பேணியணிவது பற்றித் “தெய்வ நீறு” என்று கூறுகின்றா ரென்றுமாம். திருநீற்றின் தெய்வப் பெருமையை யுணராமைக்குக் காரணம் அறிவின் சிறுமையாதலின், நீறிடாதாரைச் “சிறியர்” என்றும், அவரது பார்வை விடம்போல் கருத்தை யழிக்குமென அஞ்சி, “சீறு பாம்பு கண்டென ஒளித்தேக” என்றும் மொழிகின்றார். அவர்களது கட்பார்வையே விடம் பொருந்திய தென்பது குறிப்பிற் புலப்பட வேண்டி, “ஒளித்து ஏக” என்று குறிக்கின்றார். சைவம் சிவ சம்பந்தமாகலின், சிவசம்பந்தமுடைய திருநீற்றைச் “சைவநீறு” என உரைக்கின்றார். தலைமை மாண்புடையார்க் கன்றித் திருநீற்றின் சைவத்தன்மை புலப்படாதாகலின், நீறிடும் சைவநன் மக்களை, “சைவ நீறிடும் தலைவர்” என்று புகழ்கின்றார். அப் பெருமக்களைப் பிரியாமல் சார்ந்து ஒழுகுக என்றும், அவரோடு தனித்திருந்து உண்க என்றும் கூறலுற்று, “சார்ந்து நின்றுநீர் தனி விருந்துண்க” எனப் புகல்கின்றார். தனித்திருந்துண்டல் விருந்தாகாது; ஆயினும் அது சைவநீறிடும் தலைவருடனாயின் கொள்க என்பது இதனால் கூறப்படுகிறது. ஒருவினை நிகழ்ச்சிக்குரிய தொழில் முதனிலை எட்டனுள் செய்பவன் செயல் என்ற இரண்டும் தலையாயவை; அவையேயன்றிச் செய்விப்பவனும் ஒருகால் உண்டென்பது பற்றி, “செய்பவன் செயலும் அவையுடனே செய்விப்பானுமாய்”ச் சிவன் நம்மை இயக்குகிறான் என வள்ளற் பெருமான் எடுத்துரைக்கின்றார். உலகில் உயிர்களைச் செய்பவனாகவும், உயிரில் பொருள்களைச் செயற் கருவியும் பொருளுமாகவும், தான் செய்விப்பானாகவும் சிவபரம்பொருள் அமைத்துத் திருவம்பலத்தே தான் இயற்றியருளும் திருக்கூத்தால் இயக்கி வாழ்விக்கின்றான் என்ற உண்மையை, “தில்லையம்பலத்துள் உய்வதே தரக் கூத்துகந் தாடும் ஒருவன்” என்று சொல்லி, அப் பெருமான் நமது மனத்தின்கண் எழுந்தருளி ஆடல் புரிதற்கு இத் திருநீறு வேண்டப்படுகிறது என்றற்கு “ஒருவன் நம்முளம் உற்றிடற் பொருட்டே” என்று தெளிய வற்புறுத்துகின்றார். சிவபெருமான் உலகின்கண் உயிர்களைத் தோற்றுவித்துச் செய்விப்பானாய் நின்று செயல் புரிவித்து உய்திபெறச் செய்கின்றான். இக் கருத்துச் சைவத்தின் தனியுண்மை என அறிக.
நீறிடாச் சிறுமை நீங்கி அணியும் தலைமை யுடையராதல் சிவபுண்ணியம்; கூத்துகந்தாடும் ஒருவன் நம்முளம் உற்றிடற் பொருட் டென்பது தேற்றம் எனப் பகுத்துணர்க. (3)
|