2
2. இறைவனைப் பரவி வழிபடுமிடத்து வேண்டுவனவற்றை
நினைத்தல் வேண்டியிருக்கிறது. நினைந்து செய்கிற எச்செயலும் நற்பயன் தருகிறது. மறதி கேட்டை
விளைவிக்கிறது. நினைக்கிற கருவி மனம்; அது மக்களால் செய்து கொள்ளப்படுவதில்லை; இறைவன்
படைத்தருளியது. மாயை என்ற அறிவில்லாத ஒன்றிலிருந்து அது படைக்கப்பட்டதென்பர். தன்னியல்பில்
அறிவில்லதாதலால், தானே ஒன்றையும் செய்தலின்றிச் செய்விக்கச்செய்யும் இயல்பினதாக உளது.
மனத்தின்கண் நிகழும் நினைவு மறதிகட்குக் காரணம் யாதாகலாம் என்று எண்ணிய வள்ளலார் இறைவனது
திருவருளியக்கம் எனத் தெளிந்து, ‘நினைப்பித்தால் நினைக்கின்றேன்; மறப்பித்தால் மறக்கின்றேன்’
என்று தெரிவித்துக் கொள்ளுகின்றார்.
1968. சீர்சான்ற வேதச் செழும்பொருளே சிற்சொரூபப்
பேர்சான்ற உண்மைப் பிரமமே - நேர்சான்றோர்
நாடும் பரசிவமே நாயேனுங் கன்புநின்பால்
நீடும் படிநீ நிகழ்த்து.
உரை: சிறப்பமைந்த வேதங்களின் செழுமையான பொருளானவனே, சிற்சொரூபம் என்ற பேர்பெற்ற உண்மைப் பிரமப்பொருளே, நேரிய அறிவானமைந்தோர் நாடுகின்ற பரசிவமே, நாயினேனுக்கு உன்பால் அன்பு நெடிது நிலவுமாறு அருளுக, எ.று.
பொருட்குச் செழுமை உருவும் திருவும் தருவதும்போல வேதப் பொருட்குப் பெருமை பேசப்படுதலால் “செழும் பொருளே” என்று சிறப்பிக்கின்றார். பிரமம் சிற்சொற்பம் என வேதநூல் கூறுதலால் “சிற்சொரூபப் பேர்சான்ற உண்மைப் பிரமமே” என்று குறிக்கின்றார். பிரமம் என்பதன் சொற்பொருள் பெரிது என்ற அளவில் நின்று பொருண்மை சுட்டாமையால், பொருண்மையில் உண்மையெனவும், அதன் சிறப்பியல் ஞானம் என்றற்குச் சிற்சொரூபம் எனவும் விளக்குகின்றார். சொன்மையும் பொருண்மையும் வைத்து ஆராய்ந்தயர்வதின்றி நேர்மை நெறியில் நற்காட்சி பெற்ற சான்றோர் “பரசிவம்” என்று உணர்ந்து நாடுதலால், “நேர் சான்றோர் நாடும் பரசிவமே” என்று இயம்புகின்றார். சத்தியம் சிற்சொரூபம் பிரமம் எனப்படுவது பரசிவம் என உணர்த்தி, அதன்பால் அன்புசெய்வது ஞானம் என அறிவு நூல் கூறுதலால், அந்த அன்பும் அச்சிவத்தின் அருளால் உளதாகலின். “நாயேனுக்கு அன்பு நின்பால் நீடும்படி நீ நிகழ்த்து” என எடுத்த எடுப்பிலே வேண்டுகின்றார். இதனால், அன்பு செய்ய அருள்க என வேண்டியவாறு.
|