3

      3. இறைவன் அருவாயும் உருவாயும் அருவுருவாயும் உள்ளான் என்று அறிவு நூல்கள் கூறுகின்றன. அதனை ஆழ்ந்து சிந்தித்த அறிஞர் அருவில் அருவாகவும், உருவில் உருவாகவும் இறைவன் இருக்கின்றான் என்று கூறுகின்றார்கள். இங்ஙனம் இருப்பதால் இறைவனைக் காண்பது எவ்வாறு எனக் கருதுகின்றார் வடலூர் வள்ளல். அதனை இப் பாட்டில் தொகுத்து இறைவனையே முன்னிலைப்படுத்தி வினவுகின்றார். 

1969.

     நினைப்பித்தா நித்தா நிமலா எனநீ
     நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் - நினைப்பின்
     மறப்பித்தாலி யானும் மறப்பேன் எவையும்
     பிறப்பித்தாய் என்னாலென் பேசு.

உரை:

     எல்லாவற்றையும் தோற்றுவித்த பெருமானே, நின்னைப் பித்தா, நித்தா, நிமலா என்று நினைக்கச் செய்தால் ஏழையாகிய யான் நினை நினைப்பேன்; நினைவின்கண் மறக்கும்படி செய்தால் யானும் நின்னை மறந்துவிடுவேன்; என்னால் ஆவது என்னுளது? நீயே சொல். எ.று.

     என்பால் உண்டாகும் நினைப்பும் மறப்பும் என் இச்சைவழி நிகழ்வதில்லை; நீ என்னுள்ளத்தை நினைக்கச் செய்தால் நான் உன்னை நினைப்பேன் என்பாராய், “நினைப்பித்தால் ஏழை நினைப்பேன்” என்றும், நினைக்கச் செய்யுமிடத்தும், பித்தா எனவும் நித்தா எனவும் நிமலா எனவும் நினைக்கச் செய்தால், யான், “நினைப் பித்தா நித்தா நிமலா என நினைப்பேன்” என்றும் சொல்லுகின்றார். பித்தன், ஒருகால் தன்னை நினைந்தாரைப் பின்னர்த் தன்னையே நினையுமாறு பித்தேற்றுபவன். நித்தன் - என்றும் உள்ளவன்; நிமலன் - மலத்தொடக்கில்லாதவன். நினைக்க செய்வதும், நினைக்குமிடத்து நினைக்கத் தகுவனவற்றை நினைப்பித்தலும் அவன் செயல் என்றவர், நினைப்பின்றி மறக்கச்செய்வதும் அவன் செயலே என்றற்கு “மறப்பித்தால் யானும் மறப்பேன்” என்று இயம்புகின்றார். நினைப்பு மறப்புக்குரிய கருவிகளைப் படைத்து, இயல்பில் செயல்படுவன வல்லாமை கண்டு இயக்குபவனும் அவனே என்பது தோன்ற, “எவையும் பிறப்பித்தாய்” என்றும், எனவே, இவை என் பரமல்ல என்பாராய், “என்னால் என்? நீயே பேசு” எனவும் உரைக்கின்றார். “நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே” (குழை) என்பது திருவாசகம்.

     இதனால் நின்னை என்றும் மறவாமை யருள்க என வேண்டியவாறு .