3

     3. இறைவன் அருவாயும் உருவாயும் அருவுருவாயும் உள்ளான் என்று அறிவு நூல்கள் கூறுகின்றன. அதனை ஆழ்ந்து சிந்தித்த அறிஞர் அருவில் அருவாகவும், உருவில் உருவாகவும் இறைவன் இருக்கின்றான் என்று கூறுகின்றார்கள். இங்ஙனம் இருப்பதால் இறைவனைக் காண்பது எவ்வாறு எனக் கருதுகின்றார் வடலூர் வள்ளல். அதனை இப் பாட்டில் தொகுத்து இறைவனையே முன்னிலைப்படுத்தி வினவுகின்றார். 

1970.

     உருவாய் உருவில் ஓங்கி
     அருவாய் அருவில் அருவாய் - ஒருவாமல்
     நின்றாயே நின்ற நினைக்காண்ப தெவ்வாறோ
     என்தாயே என்தந்தை யே.

உரை:

          உருவமாயும் அருவமாயும், உருவில் உருவாகியும் அருவில் அருவாகியும் இரண்டிலும் நீங்காமல் நின்ற் பெருமானே, இங்ஙனம் நின்ற நின்னை அடியேன் காண்பது எவ்வாறு? எனக்குத் தாயும் தந்தையுமாதலால் அருளுக, எ.று.

     உருவம் அருவம் எனப் பொருள்கள் இருவகையால் இயன்றுள்ளன. உருவம் கண் முதலிய பொறியைந்தாலும், அருவம் மனத்தாலும் அறியப்படுகின்றன. பரம்பொருளாகிய சிவம் உருவப்பொருள் அனைத்திலும் கலந்து உருவாயும், அருவத்தில் அருவாயும் உண்மை உணரப்படுதலின், “உருவாய் உருவில் உருவாகி” எனவும், “அருவாய் அருவில் அருவாய்” எனவும் உரைக்கின்றார். உருவும் நிறமும் பலதிறப்படினும், அவற்றினின்றும் அருவநிலை யுயர்ந்தோங்குதலின் “ஓங்கி” எனச் சிறப்பிக்கின்றார். நிறத்தாலும் உருவாலும் நாய்கள் பலதிறப்படினும், நாய் என்றவழி அதன் அருவநிலை உள்ளத்தில் உணர்வின்கண் ஓங்கித் தோன்றுவது அறிஞர் அறிந்தது என்க. உருவுடைய பொருட்கு உருவும், அருவப் பொருட்கு அருவமும்தந்து இயக்குதலின் இரண்டினும் நீங்காமல் உள்ளாய் என்றற்கு “ஒருவாமல் நின்றாயே” எனவும், நிற்றலை யுணரும் நான் காண்டல் வேண்டும்; காணுமாறு எவ்வாறு என வேண்டுவாராய், “நின்ற நினைக்காண்பது எவ்வாறோ?” எனவும் வினவுகின்றார். தாயாய் உடலும் தந்தையாய் உணர்வும் தந்தனையாதலின், உடலிலுள்ள கருவி கரணங்கள் காண உருவிலோ, உணர்வின்கண் அருவிலோ யான் காண அருள்க என்பாராய் “என் தாயே தந்தையே” என உரைக்கின்றார்.

     இதனால், இறைவனே, உருவிலோ அருவிலோ யான் உன்னைக் காணுமாறு செய்க என வேண்டிக்கொண்டவாறு.