6
6. வெளிக்குள்
வெளியாயும் ஒளிக்குள் ஒளியாயும் இறைவன் உறைகின்றான் என அறிவு நூல்களில் அறிஞர் உரைப்பது
வடலூர் வள்ளலின் திருவுள்ளத்தைச் சிந்திக்கத் தூண்டுகிறது. வெளிக்குள் வெளியென் பதையும் ஒளிக்கும்
ஒளியென்பதையும் எங்ஙனம் கண்டார்கள் என எண்ணுகின்றார். பெரியோர் பலரும் தமக்குமுன் வாழ்ந்த
பேரறிஞர் கண்டதாக உரைக்கின்றார்களேயன்றித் தாம் நேரிற் கண்டதாகக் கூறாமை அவரை மயக்குகிறது.
“கீதங்கள் பாடுதல் ஆடுதல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை” என மாணிக்கவாசகர் முதலியோர்
கூறுவதைக் காணவும், பேரறிஞரே அறியாராயின் சிற்றறிவுடைய யான் எங்ஙனம் அறிவேன் என ஏக்கம்
கொள்கிறார்; இப்பாட்டில் அதனை வைத்துப் பாடுகின்றார்.
1973. பேரறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல்
யாரறிவார் யானோ அறிகிற்பேன் - சீர்கொள்
வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள்
ஒளியாகி நின்ற உனை.
உரை: சீர்கொண்ட வெளியாய், வெளிக்குள் விளங்கும் பரவெளியாய், அங்கே நிலவும் ஒளியாய், அவ்வொளிக்குள் தோன்றும் ஞான வெளியாகி நிற்கின்ற உன்னைப் பெரியோர் தமது பேரறிவுகொண்டு கண்டும் அறியாரென்னில் அறிபவர் யாவர்? அடியேன் அறியவல்லானாவனோ? எ.று.
மாயாகாரிய வுலகுகள் பலவற்றிற்கும் அப்பால் அவற்றின் கலப்பின்றியுள்ள பெருவெளி, “சீர்கொள் வெளி” எனப்படுகிறது. அவ்வொளிக்குள் விளங்கும் அருள்வெளி கடந்து அதற்கப்பால் சிவம் விளங்கும் ஞானவெளியை “வெளிக்குள் வெளி” எனவும், இவ் வெளிகளில் நிலவும் அருளொளியை ஒளி யெனவும், அதற்குள் திகழும் சிவவொளியை ஒளிக்குள் ஒளி யெனவும், அவ்வொளி வேறு ஒளியையுடைய சிவம் வேறென்னாவாறு ஒளியேயாய் நிற்பதுபற்றி, “ஒளியாகி நின்ற உனை” எனவும் உரைக்கின்றார். அருளொளிக்குள் சிவவொளியாய் நிற்குமதனை “அருட்பெருஞ்சோதி” எனப் பிறவிடங்களில் அறிவிக்கின்றார். பெரியராயினார் ஞானானுபவம் என்ற அறிவுக்கண்ணால் உளதென்று கண்டாராயினும் அதன் உண்மை நிலையை அறிந்துரையாமையின் “பெரியோர் பேரறிவாற் கண்டும் அறியாரேல்” எனக் கூறுகின்றார். “உண்டொர் ஒண்பொருள் என்றுணர் வார்க்கெலாம் பெண்டிர் ஆண் ஆலி என்றறியொண்நிலை; தொண்டனேற்குள்ளவா வந்து தோன்றினாய்; கண்டும் கண்டிலேன், என்ன கண்மாயமே” என மணிவாசகப் பெருமான் கூறுவது காண்க. இப்பாட்டில், பெரியோர் என்றது மணிவாசகர் முதலியோரை எனக் கொள்க. பெரியோர கண்டும் கண்டிலேன் என்பாராயின் பிறரெல்லாம் சிற்றறிவாற் சிறியராதலின் அறியார் என்றற்கு “யார் அறிவார்” என்றும், யான் எல்லாரினும் கடையேனாதலின் அறியேன் என்பார் “யானோ அறிகிற் பேன்” என்றும் உரைக்கின்றார்.
இதனால் ஒளிக்குள் ஒளியாய் ஓங்கும் சிவபரம் பொருளை யான் அறியும் ஆற்றலையுடையே னல்வேன் என்று கூறியவாறு.
|