7
7. கண் முதலிய
கருவிகள் காண்பது முதலியன செய்வதும்,. மன முதலிய கரணங்கள் நினைப்பது முதலியன செய்வதும் தாமே
செய்வன அல்ல; இறைவனுடைய திருவருள் இயக்கம். அது காண்பிக்கக் கண் காண்கிறது; கேட்பிக்கச்
செவி கேட்கிறது. இவ்வாறே கருவிகள் பலவும் தமக்குரிய தொழிலைச் செய்கின்றன என்பதை
வள்ளற்பெருமான் நினைந்தருள்கின்றார். அவர் எதிரே, நான் கண்டேன். கண்டேன், கேட்டேன்
எனவும், சிந்தித்தேன் தெளிந்தேன் எனவும் மக்கள் பேசுவதும் உரைப்பதும் வியப்பைத் தருகின்றன.
திருவருளின் செயலை மறந்து ஒழுகுவது நன்றன்றென்ற கருத்தை இப் பாட்டில் தொடுத்துப்
பாடுகின்றார்.
1974. வந்தித்தேன் பிட்டுகந்த வள்ளலே நின்னடியான்
சிந்தித்தேன் என்றல் சிரிப்பன்றோ - பந்தத்தாஞ்
சிந்துசிந்திப் பித்தெனது சிந்தையுணின் பொன்னருளே
வந்துசிந்திப் பித்தல் மறந்து.
உரை: வந்தியென்பவள் தந்த பிட்டை விரும்பியுண்ட வள்ளலாகிய சிவபெருமானே, நின் திருவடியை நினைந்து வழிபட்டேன்; ஆனால் பந்தத்தால் உண்டாகும் குறைபாட்டைக் கெடுத்து என் மனத்திற்குள் உன் பொன்போன்ற திருவருள் வந்து புகுந்து உன்னை நினைக்கச் செய்வதை மறந்து நின் திருவடியை யான் நினைந்தேன் என்பது சிரிப்பைத் தருகிறது.
மதுரையில் வாழ்ந்த வந்தியென்பவள் அன்புடன் தந்த பிட்டையுண்ட திருவிளையாடல் நெஞ்சிற்கிடந்து இன்புறுத்துவதால் “பிட்டுகந்த வள்ளலே” எனப் பேசுகின்றார். பிட்டு விற்கு மொருத்தியென இகழாமல் அருள்புரிந்தமையின் “வள்ளலே” என்று வடலூர் வள்ளலார் மொழிகின்றார். வந்தியிடம் கூலியாளாக வந்த சிவபெருமானை, “அன்னையெனத் தன்பால் இன்னருள் சுரந்துவரு காளை” (பரஞ். திரு. மண். 20) என்றலின், வள்ளலார் “வள்ளல்” என்கின்றாரென அறிக. மனத்தால் நினைந்து வாயாற் பரவி மெய்யால் வணங்கி வழிபட்டேன் என்றற்குச் சுருங்கிய சொல்லால் “வந்தித்தேன்” என்றவர், அதனகண் சிந்தித்தல் அடங்கியிருப்பதை யெண்ணி; “நின்னடியான் சிந்தித்தேன் என்றல் சிரிப்பன்றோ” என்று தெரிவிக்கின்றார். பந்தம் - கட்டு; உலகியல் தொடர்பால் உளதாகும் தடையுமாம். பந்தத்தால் உளதாவது அறிவுக் குறைபாடு; அஃது இங்கே சிந்து எனப்படுகிறது. உடற் குறையுடையாரைச் சிந்தென்பர். சிந்துதல் - கெடுதல்; நீங்குதலுமாம். திருவருள் பொன்போற் போற்றப்படுதல் பற்றிப் “பொன்னருள்” என்றும், அது தானே வந்து உள்ளத்திற் புகுந்து சிந்திக்கச் செய்வது நன்கறிந்த வுண்மையாதலால் “பொன்னருளே வந்து சிந்திப்பித்தல்” என்றும், அதனை மறத்தல் அறியாமை என்பது விளங்க “மறந்து” என்றும் கூறுகின்றார்.
இதனால், அவனருளாலே அவன் தாள் வணங்கப்படுவது விளக்கியவாறு.
|