8
8.
வள்ளற்பெருமான், தாம் பாடிய பாட்டைப் படிக்கின்றார்; தம்பால் வந்த அறிஞர்களைப் படிக்கச்
சொல்லிக் கேட்கின்றார்; பலரும் பாட்டின் நலம் வியந்து பாராட்டுகின்றார்கள். அவரும்
“நான் இன்சொற்களையே தேர்ந்தெடுத்துப் பாடுகின்றேன்” என வுரைக்கின்றார். உடனே அவர் திருவுள்ளம்
இறைவனது அருட்செயலென்ற உண்மையை நினைக்கின்றது. திருவருளியக்கத்தை மறந்தமையை முன் வைத்து,
இவ்வெண்பாவைப் பாடுகின்றார்.
1975. தேனென்ற இன்சொல் தெரிந்துநினைப் பாடுகின்றேன்
நானென் றுரைத்தல் நகைஅன்றோ - வான்நின்ற
ஒண்பொருணீ உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும்
வண்பொருளும் ஈதல் மறந்து.
உரை: ஞான வானத்தில் ஒண்பொருளாயிருக்கின்ற பெருமானாகிய நீ, திருவுள்ளம் மகிழ்ந்து அருள் கூர்ந்து இனிய சொற்களும் வளவிய பொருளும் வழங்கியருளுகின்றாய் என்பதை மறந்து, தேன் போன்ற இனிய சொற்களைத் தேர்ந்தெடுத்து உன்னை நான் பாடுகின்றேன் என்று கூறுவது நகைப்பைத் தருவதாகும். எ.று.
வான் என்பது மழைமேகம் தங்கியிருக்குகிற வானமன்று; தத்துவா தீதமான ஞானகாய மெனப்படும், வான்; அதனைச் சிதாகாசம் என்பது முண்டு. அங்கேயிருந்து திருக்கூத்தியற்றுதலால், “வானின்ற ஒண்பொருள் நீ” என்று கூறுகின்றார். அத் திருக்கூத்துப் படைத்தல் முதலிய தொழிலைந்துக்கும் காரண மாதலோடு உடம்பொடு கூடி நிற்கும் உயிர் அறிவதும் செய்வதும் புரிந்து உலகியற் போகங்களை நுகர்ந்து அறிவு விளக்கம் பெறுவதற்கும் காரணமாகிறது. அத்தகைய பரமகாரணப் பொருளாகிய சிவன் மனமுவந்து பாடுமுயற்சிக்கு அருள் துணை செய்வதை நினைந்து, “நீயுள்ளம் உவந்து அருளால் சொல்லும் பொருளும் ஈதல்” என்று கூறுகின்றார். உள்ளத்தில் உவப்புத் தோன்றாவிடின் அருள் பிறவாதாகலின், “உள்ளம் உவந்து” எனவும், அருளாவிடத்து இனிய சொல்லும் வளவிய பொருளும் எய்தா என்றற்கு “இன் சொல்லும் வண்பொருளும் ஈதல்” எனவும், மறத்தற்காகாத செயலை மறந்தது கூடாதென்பது தோன்ற “மறந்து” எனவும் மொழிகின்றார். மறந்ததோடு நில்லாமல், “நினைப்பாடுகின்றேன் நான்” என்பது பொருந்தாது என்றும், அவ்வாறு சொல்லுமிடத்துத் தேன்நின்ற இன்சொல் தெரிந்து எடுத்துப் பாடுகின்றேன் என்பது மெய்யுணர்ந்தோர்க்குப் பொய்யாய்த் தோன்றி எள்ளல் பற்றிய நகை விளைவித்தல் கண்டு, “பாடுகின்றேன் நான் என்று உரைத்தல் நகையன்றோ” என்றும் உரைக்கின்றார்.
இதனால், இறைவன் திருவருள் இன்றிச் சொல்லும் பொருளும் சிறக்க இனிது தொகுத்துப் பாடல் இயலாது என அறிவித்தவாறு.
|