9
9. உமாதேவியைப் பங்கிலேயுடைய சிவபெருமான் கயிலாயத்தில் இருப்பதாகப் புராணங்கள் உரைக்கின்றன;
சைவ தத்துவ சாத்திரங்கள் அப்பெருமான் எங்கும் எப்பொருளிலும் உள்ளானென்று கூறுகின்றன. உருவ நிலையில்
தேவியும் தானுமாகவுள்ள சிவபெருமான் வாழுமிடம்
யாதாகலாம் என நினைக்கின்ற வடலூர் வள்ளல், அண்டங்களையும் அவற்றிலுள்ள பண்டங்களையும் அவ்வண்டங்களைத்
தன்னகத்தே கொண்டிருக்கும் பரவெளியையும் எண்ணிப் பார்க்கின்றார். துறவிகள் உள்ளங்களையும்
நோக்குகின்றார்கள். இவை யாவும் சிவபெருமானுக்கு, இடமாயினும் இவற்றுள் அவற்கு வாழிடம் யாது
எனப் புராணிகர்களை இப் பாட்டால் வினவுகின்றார்.
1976. அண்டங்க ளோஅவற்றின் அப்பாலோ இப்பாலோ
பண்டங்க ளோசிற் பரவெளியோ - கண்தங்க
வெம்பெருமால் நீத்தவர்தம் மெய்யுளமோ தையலொடும்
எம்பெருமான் நீவாழ் இடம்.
உரை: எம்பெருமானே, அண்டங்களா, அவற்றிற்கு அகத்திலா, புறத்திலா, அவற்றுள்ளே யிருக்கின்ற பொருள்களிலா, இவையெல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள பரவெளியிலா, முற்றத்துறந்த முனிவர்களின் மெய்ம்மை விளங்கும் உள்ளத்திலா, இடந்தொறும் தங்குதற்கு விரும்புகின்ற பெருமானாகிய நீ உமையொடு கூடி வாழும் இடம்? எ.று.
அண்டங்கள் அளப்பரியன என்பர் திருவாதவூர். அவற்றிற்கு இப்பால் என்றது, அகப்பகுதி; அப்பால், புறப்பகுதி. அண்டங்களனைத்தையும் தன்னகத்தே கொண்டது அபரவெளியென்றும் அபர ஆகாயம் என்றும் கூறுப; அவற்றுள்ளே இருக்கும் உருவும் அருவுமாகிய பொருள்கள் யாவும் பண்டங்கள். அண்டத்தின் புறப்பகுதியை, அண்ட முகட்டின் மேலிடமாக்க் கொள்வதுமுண்டு; அண்டத்தின் அகப்புறப் பகுதிகட்கு அப்பால் அவற்றைத் தன்னகத்தே கொண்டிருப்பது பரவெளி. அது தானும் அறிவுக்கண் கொண்டு காணப்படுதலால் “சிற்பரவெளி” எனக் குறிக்கப்படுகிறது. கண் - இடம் வெம்பெருமான் என்ற விடத்து, வெம்மை விரும்புதற் பொருளாகும். 'வெம்மை வேண்டல்' என்பது தொல்காப்பியம் . நீத்தவர்-முற்றத்துறந்த பெரியோர். மெய்யுணர்வால் அவரது திருவுள்ளம் உண்மையொளி நிறைந்து திகழ்தலின், “நீத்தவர்தம் மெய்யுளமோ” என்று கேட்கின்றார். “உண்மைமுலையுமையாளொடு உடனாகிய ஒருவன்” எனவும், “அரிவையொடு பிரியாவகை பாகம் பெண்டான் மிக ஆனான்” எனவும் சான்றோர் கூறுதலால் “தையலொடும் நீவாழிடம்” என உரைக்கின்றார்.
அகளமாய் நிற்கும் பெருமானைச் சகள நிலையில் வைத்துப் பரவுதலால், அதற்கேற்ப, வாழிடம் யாது எனக் கேட்கின்றவாறு.
|