10
10. சிவபரம்பொருள் பொன்னார் மேனியனாய் உருக்கொண்டது, பல்வேறு புவனங்களும் நில முதலிய
பூதங்களும், அவற்றிடையே உடம்பெடுத்து வாழும் உயிர்த்தொகையும் தோன்றியபோது, அவற்றிற்கு உரிய
போகங்களை நல்குதற் பொருட்டே என்று அறிஞர் கூறக் கேட்ட வள்ளல் பெருமான், புவன போகங்களைத்
தோற்றுவித்துப் பின் பொன்னுருவம் கொண்டானா? பொன்னுருவம் கொண்ட பின்னே புவன போகங்கள்
தோற்றுவிக்கப்பட்டனவா? என எண்ணி, பொன்னுருவம்
கொள்ளாதபோது புவனமோ,
பூதமோ, போகமோ, உயிர்த் தோற்றமோ இல்லையெனத் துணிந்து, இப் பாட்டால் அக்கருத்தைத் தெரிவிக்கின்றார்.
“கோலம் நீ கொள்வதற்கு முன்னே பின்னோ, குளிர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே” எனவும்,
“திசையெட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே” எனவும் திருநாவுக்கரசர்
நினைந்து சிவனை வினவிய குறிப்பும் இங்கே நினைக்கப்படுகிறது.
1977. பூதமெங்கே மற்றைப் புலனெங்கே பல்லுயிரின்
பேதமெங்கே அண்டமெனும் பேரெங்கே - நாதமெங்கே
மன்வடிவ மெங்கே மறையெங்கே வான்பொருணீ
பொன்வடிவம் கொள்ளாத போது.
உரை: பேரும் பொருளாகிய நீ பொன்மேனி கொண்ட சிவ வடியை மேற்கொள்ளாமல் அகளமாய் இருந்தபோது, ஐம்பெரும் பூதங்களில்லை; மற்றைப் பொறிபுலன்கள் இல்லை; பலவாகிய உயிர்களில்லை; அண்டங்கள் இல்லை; சுத்த தத்துவ மத்தகமாகிய நாத தத்துவமில்லை; சராசரமாகிய வடிவங்கள் இல்லை; அவற்றிற்கமைந்த வேதங்களில்லை. எ.று.
வான் - பெருமை; சிவத்தினும் பெரும் பொருளில்லையாதல் தோன்ற “வான்பொருள்” என்று உரைக்கின்றார். சிவமாகிய பெரும் பொருள் சகள நிலையில் சிவன் என்னும் திருவுரு மேற்கொண்டபோது பொன்னார் மேனியுடன் பொலிந்தமைப் பற்றிப் “பொன்வடிவம்” என்றும், வடிவமின்றி அகளமாய் இருந்த நிலையை, “பொன்வடிவம் கொள்ளாத போது” என்றும் புகல்கின்றார். பூதமைந்தும் பொறியைந்தும் புலனைந்தும் அசுத்த மாயையில் ஒடுங்கிக் கிடந்தமையின், “பூதமெங்கே மற்றைப் பொறியெங்கே” என்று கூறுகின்றார். உயிர்கள் பலவாய், அப்பன்மைக்கேற்பப் பல்வேறு உருவுடன் ஒன்றோடொன்று ஒவ்வாமல் இருக்குமாறு புலப்படப் “பல்லுயிரின் பேதமெங்கே” என்றும், உயிர்கள் பலவாறு வேறுபடுவது போல அவை உறையும் அண்டங்களும் பல்லாயிரக்கணக்கில் வேறு வேறுள்ளமை கூறப்படுகிறது பற்றி “அண்டமெனும் பேரெங்கே” என்றும் இயம்புகின்றார். அசுத்த மாயைக்குமேல் சுத்த மாயையின் காரியமாய் அதன் மேன்முடியில் இருப்பதாகிய சிவதத்துவம் நாதமெனக் கூறப்படுதலால், “நாதமெங்கே” என்று உரைக்கின்றார். இத் தத்துவக் கூறுகட்கு இடமாவது உயிர்கள் நின்றிலங்கும் உருவுடைய உடம்புகளென்றற்கு “மன்வடிவ மெங்கே” என வியந்துரைக்கின்றார். மன்னும் உயிர்கட்கமைந்தது இவ்வடிவ மென்றற்கு “மன்வடிவம்” என்றும், இவ்வடிவு கொண்ட உலகில் வாழ்தற்கென விதிவிலக்கு வகுத்துரைப்பன மறைநூலாதல் பற்றி “மறையெங்கே” என்றும் இயம்புகின்றார். “உலகியல் வேதநூல் ஒழுக்கம்” என்று சேக்கிழார் தெரிவிப்பது காண்க.
இதனால், சிவபெருமான் சகளத் திருமேனி கொண்டது. உயிர்கள் வாழ்வாங்கு வாழ்.ந்து வாழ்த்தி உய்தி பெறற்கென்பது உணர்த்தியவாறு.
|