11
11. உலகைப் படைப்பவன் பிரமனென்றும், காப்பவன் திருமால் என்றும், ஒடுக்குபவன் சிவன் என்றும்
சான்றோர் கூறுகின்றார்கள். சமய நூல்கள் சிவனைச் சங்கார காரணன் என வுரைக்கின்றன. உலகங்களை
அவன் ஒடுக்குமிடத்து அவை திருவடி விரலுள் ஒடுங்குமாறு ஓங்கி நிற்பன. அப்போது அவன் கொள்ளும்
பேருருவை நினைக்கின்றார் வடலூர் வள்ளல். பேருருவம் பெரிய சோதிப் பிழம்பாகவும், இயற்கைத்
திருவுருவம் ஞானமயமாகவும் இருக்கின்றன. அவற்றை இப் பாட்டின் கண் வைத்துப் பாடுகின்றார்.
1978. பேருருவோ சோதிப் பிழம்பாகும் சின்மயத்தின்
சீருருவோ தேவர் திருவுருவம் - நேருருவில்
சால்புறச்சேர் அண்ட சராசரங்கள் எல்லாம்நும்
கால்விரற்பால் நின்றொடுங்குங் கால்.
உரை: பெருமானே, நேரிய திருவுருவைச் சேர்கின்ற அண்டத்துச் சராசரங்களெல்லாம் நும்முடைய திருவடி நிழலில் நின்றொடுங்குங்கால் நுமது பேருருவம் சோதிப் பிழம்பாகவும், ஞானமயமான நும் சீருருவம் தேவர் திருவுருவமாகவும் இருத்தலால், எவ்வுருவின்கண் அடங்குமோ, அறியேன் எ.று.
அண்டங்களும் அவற்றின்கண் உள்ள சராசரங்கள் யாவும் இறைவன் திருவடியின்கண் முகிழ்த்தனவாதலால், ஒடுங்குங்கால் அத் திருவடியின் கண்ணே ஒடுங்கும் என்பது யாவர்க்கும் ஒப்ப முடிந்த கருத்தாம் என்றற்கு, “எல்லாம் நும்கால் விரல்பால் நின்றொடுங்குங்கால்” எனவுரைக்கின்றார். “நீலமேனி வாலிழை பாகத்தொருவன் இருதாணிழற் கீழ் மூவகையுலகும் முகிழ்த்தன முறையே” (ஐங். கட. வா) எனப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கூறுதலால், 'அண்ட சராசரங்கள் எல்லாம்' தோன்றுமிடம் இறைவன் திருவடியாதல் உணரப்படும். இக் கருத்தும் விளங்க, வள்ளற்பெருமான், “நேர் உருவிற் சால்புறச் சேர் அண்ட சராசரங்கள்” என்பது காண்க. யாது எவ்விடத்திற்றோன்றும், அஃது அவ்விடத்தே ஒடுங்கும் என்பது சற்காரியவாதம். சரமும் அசரமுமாகிய உயிர்கட்குரிய உடம்புகட்கு முதற்காரணமாகிய மாயையிடத்தே அவையொடுங்குமாயினும், அம்மாயை தானும் ஒடுங்குமிடம் திருவடியாதலின், “அண்ட சராசரங்களெல்லாம் கால்விரல்பால் நின்றொடுங்குங்கால்” என்றும், அண்ட முதலிய அனைத்தும் மாயையி லொடுங்க, மாயையில் உயிர்களும் ஒடுங்க, யாவையும் இறைவன் திருவடியாகிய திருவருளில் ஒடுங்க, அனைத்தையும் தன்னுட்கொண்ட திருவருள் இறைவன்பால் ஒடுங்குமென்பது அறிவுநூன் முடிபாதல் பற்றி “நேர் உருவிற் சால்புறச் சேர்அண்ட சராசரங்கள்” என உரைக்கின்றார். சராசரங்கள் என்னாது அண்டங்களைக் கூறியது. இவ்வண்டங்கள் இடமும், சராசரங்கள் இடத்து நிகழ்பொருளுமாய் இயைந்தவை என்றற்கு. இங்ஙனம் ஒடுங்குகால் நீ கொள்ளும் உருவம் யாது? நின்னுடைய பேருருவத்திலா? சீருருவத்திலா? பேருருவமென்னின், அது சோதிப் பிழம்பாக வுள்ளதே, அண்டசராசரங்கள் உயிரை மயக்கி இருள் படுத்துவன உளவே; இவை எங்ஙனம் ஒன்றாய் இயையும் என்பாராய், “பேருருவோ சோதிப் பிழம்பாகும்” எனக் கூறுகின்றார். தேவர் திருவுருவில் இருக்கும் சீருருவமோ ஞான மயமான சைதன்யம்; இவ்வண்ட முதலியன அசேதனம், இவை எங்ஙனம் இயைந்து ஒடுங்கும் என்பாராய், “சீருருவோ சின்மயத்தின் தேவர் திருவுருவம்” என்று உள்ளத்தின் நயப்புத் தோன்ற நவில்கின்றார். “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி” யென்று மாணிக்கவாசகரும், “காதலாற் காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுள் தோன்றுமே தெல்லுலகுக்கு ஆதியாய் நின்ற அரன்” (அற்புத.) என்று காரைக்காலம்மையாரும் கூறுவது காண்க. “ஞானமூர்த்தி” எனவும், “ஞானமாகிய நற்குண ரானையார்” எனவும், “ஞானத்திரளாய் நின்ற பெருமான்” எனவும் சான்றோர் உரைத்தலின் “சின்மயத்தின் சீருருவோ தேவர் திருவுருவம்” எனத் தெரிவிக்கின்றார். பரம்பொருள் சோதிப் பிழம்பென்பதை, “அருவமும் உருவுமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பு” என்று கந்தபுராணம் உரைப்பது காண்க.
இதனால், அண்டசராசரங்கள் ஒடுங்கும்போது ஆண்டவன் கொள்ளும் திருவுருவம் யாதாம் என ஆராய்ந்தவாறு.
|