12

      12. சிவபரம் பொருளின் திருவருளாகிய அமுதமுண்டு மகிழ்ந்திருக்க வேண்டும் என்பது சிவனடியார் அனைவருடைய விருப்பமாகும். அவர் நெறியில் நிற்கும் வள்ளலாரும் தமக்கு அவ்வருள் வாழ்வு எய்துமென ஒவ்வொரு நாளும் நினைக்கின்றார். அந் நினைவு மிக்கிருக்கும் நிலையில் இப் பாட்டு தோன்றுகிறது.

1979.

     இன்றோ பகலோ இரவோ வருநாளில்
     என்றோ அறியேன் எளியேனே - மன்றோங்கும்
     தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து
     நாயனையேன் வாழ்கின்ற நாள்.

உரை:

     திருவம்பலத்தில் சிறப்புற்றோங்கும் தாய் போன்ற பெருமானே, நின்னுடைய திருவருளென்னும் தண்ணிய அமுதத்தைப் பருகி மகிழ்வுற்று நாயேன் வாழ்வுபெறலாகும் நாள் இன்றைய பகற் போதோ, இரவுப் பொழுதோ, அல்லது மேல்வரும் நாட்களில் எந்நாளிலோ, எளியனாகிய யான் அறியேன், தெரிவித்தருள்க. எ.று.

     தில்லையம்பலத்தில் திருக்கூத்தியற்றும் வகையால் தாய் போல் தயாவுடையனாய் ஓங்குவது தோன்ற, “மன்றோங்கும் தாய் அனையாய்” என்று கூறுகின்றார். திருவருளை அமுதமாக வுரைக்கும் மரபுபற்றி, “நின் அருளாம் தண்ணமுதம்” என்றும், அதனை யுண்டவழி ஞானவொளி மிகுந்து உள்ளமெல்லாம் இன்பம் பெருகுமாதலின், “தண்ணமுதம் உண்டுவந்து” என்றும் இயம்புகின்றார். அருளமுதம் உண்டு ஞானவின்பம் பெற்றாலன்றி உலகில் வாழ்வு சிறப்படையாது; அதனாற்றான், “தண்ணமுதம் உண்டு உவந்து வாழ்கின்ற நாள்” என உரைக்கின்றார். அதனை விரைவில் பெறவேண்டுமென விரும்புகின்றாராதலால், “இன்றோ பகலோ இரவோ” என்றும், இன்றன்றன்று, பின்னர்த் தான் வரும் என்று தோன்ற வுணர்ந்து “வரும் நாளில் என்றோ” என்றும் இசைக்கின்றார். அந்நாள் திட்டமாகத் தெரியாமை பற்றி, “அறியேன்” என்றும் அதற்குக் காரணம் தமது எளிமை என்பது புலப்பட, “எளியேன்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், அருளமுதமுண்டு அருளின்ப வாழ்வு பெறும் நாள் எனக்கு எப்போது எய்தும் என அவாவியவாறு.