13
13. திருவருட் பேற்றுக்குரிய நிலை தமக்கு இன்னும் வரவில்லையே என்ற கவலை வடலூர் வள்ளலார் உள்ளத்தை
அலைக்கிறது. வாராமையேன் என எண்ணுகின்றார்; பல்வேறு ஆசைகள் நெஞ்சிற் கிடப்பதை உணர்கின்றார்.
ஆசைகளை விட்டாலன்றி அருட்பேறு எய்தாது என்பதை எண்ணுகின்றார். ஆசை விட்டார்க்கு அருள்
புரியும் பரமனையடையதற்குத் தடையாக மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்றும் வாழ்வில் பேரிடர்
செய்கின்றன. அவை மலைபோலவும் கடல் போலவும் காட்சி யளிக்கின்றன. அதனை இப்பாட்டில் வைத்துப்
பாடுகின்றார்.
1980. மண்ணாசை வெற்பே மறிகடலே பொன்னாசை
பெண்ணாசை ஒன்றேஎன் பேராசை - நண்ணாசை
விட்டார் புகழும் விடையாய்நான் பொய்யாசைப்
பட்டால் வருமே பதம்.
உரை: மண்ணாசை மலை போன்றது; பொன்னாசை கடல் போன்றது; பெண்ணாசை யொன்றுளது என்பது அது என் பேராசை; இவ்வகையாக வரும் ஆசைகளை விட்டொழித்த பெரியோர் புகழும் விடையவனே, நான் பொய்யாசைப் பட்டால் நின் திருவடியைப் பெற முடியமா? முடியாது. எ.று.
நிலத்தின்பால் உண்டாகும் ஆசை மண்ணாசை; அரசர்கட்கு நாடு பெருக்குவதிலும், செல்வர்கட்கு வளவிய நிலம் பெருக்குவதிலும் ஆசை மிகுந்தவண்ணம் மிருக்குமாதலின் “மண்ணாசை வெற்பே” என்று கூறுகின்றார். வெற்பு - மலை. மக்கட்குப் பொன்மேல் உண்டாகும் ஆசை அளவிட முடியாதது; அதனால் கடலை ஒப்புக் கூறினார். கரையோடு மோதி யலைப்பது பற்றி, “மறிகடல்” எனப்பட்டது. பெண்ணாசை, ஏனை மண்ணாசை என்ற இரண்டினும் பெரிது என்றற்குப் “பெண்ணாசை ஒன்று என் பேராசை” என்று பேசுகின்றார். பெண்ணாசை தோன்றின், ஏனை இரண்டாசையும் இகழப்படுவதால் பேராசை எனல் பொருத்தமாயிற்று. இங்ஙனம் மண், பொன் பெண் என்ற மூன்றாலும் மக்கட்கு ஆசை எய்தி அல்லற்படுத்துவதால் “நண்ணாசை விட்டார்” என்றும், பெண்ணாசை விட்ட பெரியோர்களைச் சிவபெருமான் கருணையினால் ஆண்டு கொள்கின்றான் என்பது பற்றி, “நண்ணாசை விட்டார் புகழும் விடையாய்” எனவும் விளம்புகின்றார். “அரவகல் அல்குலார் பால் ஆசை நீத்தவர்க்கே வீடு தருவம் என்றளவில் வேதம் சாற்றிய தலைவன்” (திருவிளை. பாயிரம்) என்று பெரியோர் உரைப்பது காண்க. மெய்யுணர்வெய்தி உண்மையன்புடையார்க்கே எளிதிற் பெறவியலாத திருவடியைப் பொய்யாசையால் பெறலாகாதென்றற்குப் “பொய்யாசைப்பட்டால் பதம் வருமே” என்று கூறுகிறார். வினாப் பொருட்டாய ஏகாரம் எதிர்மறைப் பொருள் தருகிறது. இதனை மாறுகொள் எச்சமென்பர் தொல்காப்பியர் பதம்-திருவடி. விடையேறி வந்து பதமருளும் சிறப்புப் பற்றி “விடையாய்” என்று விளம்புகிறார்.
இதனால், மூவகையாசையும் விட்டு மெய்யன்பு கொண்டவர்க்கே சிவபிரான் திருவடிப்பேறு உண்டெனத் தெளிவித்தவாறு.
|