14
14. திருவருளை நினைந்து
நாளும் உள்ளம் வருந்துகிற வடலூர் அண்ணல் அருட் செல்வனாகிய சிவனுக்கு தமக்குமுள்ள தொடர்பை எண்ணுகின்றார்.
சிவபெருமான் தந்தையாகவும், அரிய ஆசிரியனாகவும், முன்னோனாகவும், வேத முதல்வனாகவும் இருப்பதைக்
காண்கின்றார். இவ்வாறு தொடர்புற்றிருக்கும் சிவன் தன்னை ஆட்கொள்ளத் தாழ்ப்பது நன்றன்றென
நினைந்து இப் பாட்டைப் பாடுகின்றார்.
1981. தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகைசான்ற
சிந்தையாய் என்னருமைத் தேசிகனாய் - முந்தையாய்
நீடு மறைமுதலாய் நின்றாயென் னேநெஞ்சம்
வாடுமெனை ஆட்கொள்ளா வாறு.
உரை: எனக்குத் தந்தையாயும், தாயாயும், தகுதி சான்ற மனமாயும், எனது அருமைக் குருவாயும், முன்னோனாயும் நீடிய மறைநூல்கட்கு முதலாயும் நின்ற பெருமானே, நெஞ்சு வருந்தி வாடுகின்ற என்னை இன்னும் ஆட்கொள்ளாமல் இருப்பது என்னையோ? கூறுக. எ.று.
அவ்வப்போது அறிவொளி தருதலின் “தந்தையாய்” என்றும், உடற் கூறுகள் ஒழுங்குற வளரச் செய்தலின் என்னுடைய “தாயாய்” என்றும், அறிவன அறிந்து செய்வன செய்தற்குரிய கருவிகளை இயக்குதலின் “தகைசான்ற சிந்தையாய்” என்றும் சிவபெருமானைக் குறிக்கின்றார். மறந்தவற்றை உணர்தற்கும் மயக்குற்றுக் கலங்குமிடத்துத் தெளிதற்கும் சிந்தையிடமாக நின்று உள்ளொளி செய்தலின் இறைவனை “என் அருமைத் தேசிகனாய்” உதவுகின்றாய் என உரைக்கின்றார். மக்களினத்துக்கும் வாழ்வுகாட்டுவது கொண்டு “முந்தையாய்” என்றும், அவர்கள் ஓதியுணர்தற்கு வாய்த்த மறைநூலுணர்த்தும் முதற் பொருளாவது பற்றி, “மறை முதலாய் நின்றாய்” என்றும் மொழிகின்றார். உடலோடு கூடியுறையும் மக்களுயிர் உடம்பு கொண்டு அறிவன அறிதலும் செய்வன செய்தலும் அல்லது வேறு பிற இல்லை; அறிவன பிழையின்றி அறிதற்கும் செய்வன திருந்தச் செயற்கும் உரிய கருவி கரணங்களைப் பெற்றும் பிழைபட அறிந்தும் குற்றப்படச் செய்தும் உயிர்கள் துன்புறுகின்றன; அவற்றை நினைந்து மனம்வாடி வருந்தித் துயரடைகின்றது. வாழ உடல் கருவி கரணங்களைத் தந்த நீ வாட்ட மெய்தும்போது தெளிவு தந்து ஆட்கொள்ளாமை கூடாதோவென்றற்கு “ஆட்கொள்ளாவாறு என்னே” என வேண்டுகின்றார். இதனால், உடல் கருவி கரணங்களையும் வாழும் வாழ்க்கை நெறியையும் வழங்கியருளிய நீ பிழை செய்து வருந்தும்போது வருத்தம் போக்கி ஆட்கொள்ளாமை என்னே என இரங்கி முறையிட்டவாறு.
|