15

     15. உலகில் மக்களுயிர் ஐம்புலன்கள்மேற் செல்லுகின்ற ஆசைக்கு அடிமையாய் அல்லற்படுகின்றது. அது செய்யும் வினையனைத்தும் அது காரணமாகவே உண்டாகின்றன. அறிவும் அவற்றின் வழியே இயங்குகிறது. அதனால் நெஞ்சம் வாடி வருந்தும் நிலமை யுண்டாகிறது. இதனை நன்கறிந்திருந்தும் இறைவன் அருள் செய்யவில்லை என்று கவல்கின்றார். அக் கவலை இப்பாட்டுருவில் வெளிப்படுகிறது. 

1982.

     ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
     ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ - வாட்டுகின்ற
     அஞ்சுபுல வேடர்க் கறிவைப் பறிகொடுத்தென்
     நெஞ்சுபுலர்ந் தேங்கு நிலை.

உரை:

      ஐம்புலன்களாகிய வேடர்க்கு அறிவைப் பறிகொடுத்துவிட நெஞ்சு அயர்ந்து ஏங்கி நிற்கும் எனது அவல நிலையை, தனக்குரிய பயனை நுகர்விக்கின்ற வல்வினை என்ற உட்கயிற்றால் எனக்குள்ளே யிருந்து என்னை ஆட்டுகின்ற தலைவனாகிய நீ அறிகின்றாயில்லையோ? அறிந்தால் என் நிலைக்கு இரங்கியருள்வாய். எ.று.

     செய்கின்ற வினை பயன் விளைவியாமல் கழிவதில்லை; விளைபயனை நுகர்விக்கின்ற தென்பது பற்றி “ஊட்டுகின்ற வினை” என்றும், தனக்குரிய பயனைத் தன்னை செய்தவனை விடாதுபற்றி நுகர்விப்பது குறித்து “வல்வினை” என்றும் கூறுகின்றார். வினையிடத்து விளையும் பயனைச் செய்தவனே நுகருமாறு கூட்டுவிப்பது இறைவன் செயலாதலின் நலம் தீங்குகளான பயன்களால் முறையே உயிர்கள் இன்பமும் துன்பமும் எய்துவது பற்றி “வல்வினையாம் உட்கயிற்றால் ஆட்டுகின்ற நீ” என்று உரைக்கின்றார். உயிர் வினைசெய்தற்குக் காரணம் பொறிவாயிலாகப் புலன்களின்மேல் மனமும் அறிவும் சென்று அவற்றின் வயமாதல் என்பது பற்றி, “அஞ்சுபுல வேடர்க்கு அறிவைப் பறிகொடுத்தேன்” என்றும், பற்றி, ஐம்புலன்களாகிய வேடர் அலைத்தலால் துன்ப முண்டாகிற தென்றற்கு “வாட்டுகின்ற அஞ்சுபுல வேடர்” என்றும் இயம்புகின்றார். புலன்களைந்தையும் வேடராக உருவகம் செய்வது முந்தையோர் மரபு; “ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தென” என்று சிவஞான போதம் கூறுவது காண்க. புலன்கள்மேற் செல்லுகின்ற ஆசை அறிவைத் தன்வயமாக்கிக் கொள்வது பற்றி, “அறிவைப் பறிகொடுத்தேன்” என வுரைக்கின்றார். அறிவினும் சிறந்த பொருள் வேறில்லாமையால்., அதனை யிழந்த நெஞ்சம் ஏங்கி நிற்கிறது; அதனையறிந்து அந்நிலையினின்றும் நீக்கி யருளவேண்டும் என்றற்கு, “நெஞ்சு புலர்ந்து ஏங்கும் நிலை நீதான் அறிந்திலையோ” எனத் தெரிவிக்கின்றார்.

     இதனால், புலன்மேற் செல்லுகின்ற ஆசைக்கு அறிவு அறை போகலாகாது என வேண்டிக் கொண்டவாறு.