16
16. சிவனை நினைந்தொழுகும் சிவஞானச்
செல்வர்கள் சிவனடியார்க்குத் தொண்டு செய்வதே சிறந்த சிவப்பபணியாகக் கருதுபவர்கள். அடியாரிடத்து
அன்புண்டாக வேண்டின் ஆண்டவன்பால் உள்ளத்து அன்பு மிக்கிருக்க வேண்டும். மேலும், அடியார்கட்குப்
பணி செய்வதால்
அந்த அன்பு மறவாது நின்று பெருதற்கேதுவாகும், “ஈசனுக் கன்பில்லார் அடியவர்க் கன்பில்லார்”
என்று சிவஞான சித்தியார் கூறுகிறது. இக்கருத்துக்களை நன்கு எண்ணிய வள்ளற் பெருமான் சிவனடியார்க்குப்
பணிசெய்யும் பேறு தமக்கு உண்டாக வேண்டுமென விரும்புகின்றார். அவ்விருப்பத்தை இப்பாட்டில்
இறைவனுக்குத் தெரிவிக்கின்றார்.
1983. ஆமோ அலவோ அறியேன் சிறியேனான்
தாமோ தரனும் சதுமுகனும் - தாமே
அடியா தரிக்கும் அரசேநின் ஏவல்
அடியார்க்குற் றேவலடி யன்.
உரை: தாமோதரனாகிய திருமாலும் நான்முகனும் திருவடிக்கு அன்பு செய்ய விரும்பும் அரசே, நீ ஏவின செய்யும் அடியார்க்கு அடியேன் குற்றவேல் புரிதற்கு ஆகுமோ ஆகாதோ? சிறியனாதலின் அறிகிலேன். எ.று.
திருமாலுக்கு தாமோதரன் என்பது ஒரு பெயர். நான்முகன என்பது வடமொழியில் சதுர்முகன் எனப்படும்; அது சதுமுகன் என்றும் வரும். திருமாலும் நான்முகனும் காத்தலும் படைத்தலும் செய்யும் தேவர்களாயினும், சிவபெருமான் திருவடிக்கு அன்புடன் மலரிட்டு வழிபடுதற்கு ஆர்வமுறுகின்றனர் என்றற்குத் “தாமோதரனும் சதுமுகனும் அடியாதரிக்கும் அரசே” என உரைக்கின்றார். இருவரும் சிவனை வழிபட்ட வரலாறுகள் தலபுராணங்களில் பல்கிக் கிடக்கின்றன. பிறர் சொல்லாமே தாமே விரும்பித் திருவடிக் காதரம் செய்கின்றமை விளங்கத் “தாமே அடியாதரிக்கும் அரசே” என்று கூறுகின்றார். ஏவலடியார் -சிவபிரான் திருமுன் அவன் ஏவின ஏற்றுச் செய்யும் அடியவர். ஏனையோரை நோக்க அவர் உயர்ந்தமை தோன்ற, “நின்னேவேல் அடியார்” என்றும், அந்த அடியார்கட்குக் குற்றவேல் செய்யும் பணி தமக்கு எய்த வேண்டும்; அது தனக்கு ஆகுமோ ஆகாதோ என்றற்கு “அடியார் குற்றவேல் அடியேனுக்கு ஆமோ அலவோ அறியேன்” என்றும் கேட்கின்றார். அடியன் என்றவிடத்துக் குவ்வுருபு தொக்கது. அறிவின் சிறுமையால், குற்றவேல் செய்யும் சிறப்பு தனக்கு எய்துமோ என்பதறியேன் என்பார் “சிறியேனான்” என்று தெரிவிக்கின்றார்.
இதனால், அடியார்க்கு அடிப்பணி செய்யும் பெருமை தமக்கு ஆகுமோ ஆகாதோ என அறிய விழையுமாறு பெற்றாம்.
|