18
18. பெண்ணாசை பொல்லாது
என்பவர் பெண்களை எமன் என்று சொல்லி அச்சுறுத்துவர், “நன்மனை தோறும் பெண்களைப் படைத்து
நமனை என்செயப் படைத்தாய்” என்று விவேகசிந்தாமணி என்ற நூல் கூறுவதைச் சான்றாக்க் கூறுவர்.
அச்சொற்களைக் கேட்டு நான் அஞ்சுவதில்லை. “சிறியான் பயமறியான்” என்பதற்கொப்ப நான் அறிவிற்
சிறியவன்; ஆதலால் பெண்ணாசை பற்றி நான் சிறிதும் அஞ்சுவதில்லை என்று இறைவனிடம் தெரிவிக்கின்றார்.
1985. சென்றுரைப்பார் சொல்லில் சிறியான் பயமறியான்
என்றுரைப்பார் ஆங்கதுமற் றென்னளவே - மன்றகத்தோய்
அஞ்சேல் விழியாரை அந்தகனென் பார்மொழியை
அஞ்சேன் சிறிதும் அறிந்து.
உரை: மன்றில் விளங்கும் பெருமானே, உரைக்கத்தக்கவர் பக்கத்தே சென்று சொல்வாராயின், கேட்கும் பெரியவர், 'அவன் சிறியவன்; அச்சம் அறியான்' என்று சொல்லுவர்; அச்சொல் என்னளவில் பொருந்துவதாம்; அழகிய சேல்மீன் போன்ற கண்களையுடைய மகளிரை எமன் என்று சொல்லி அச்சுறுத்துவர்; அவர் மொழியின் மெய்ம்மையை அறிந்தும் யான் சிறிதும் அஞ்சுவதில்லை, காண். எ.று.
பொன்னம்பலத்தில் ஆடுகின்ற பெருமானாதலின், “மன்றகத் தோய்” எனப் புகழ்கின்றார். தக்க பெரியோர்பால் ஒருவரைப் பற்றி எவரும் சென்று யாதும் உரைத்தல் இயலாது; அவருடைய பக்கத்தே சென்று உரைக்கத்தக்க தகுதியுடையாரே உரைப்பர்; உரைப்பின் அதனைச் செவியேற்கும் பெரியவர் தமது பெருமைக்குத் தகநினைத்து, “அவன் சிறியவன், இளங்கன்று பயமறியாது என்றபடி சிறுமையால் அச்சம் அறியான்” என்று சொல்லிப் புறக்கணிப்பர் என்பாராய், “சென்றுரைப்பார் சொல்லின் சிறியான் பயமறியான் என்று உரைப்பார்” என்று எடுத்துரைக்கின்றார். தக்க பெரியோர்பாற் செல்பவர்; என்னையொரு பொருளாக எண்ணி யுரையா ரென்றற்குச் “சொல்லின்” என்றும், சொல்லின் ஏலார்; ஏற்பினும் தமது பெருமையால் எனது சிறுமைக்கு இரங்கிச் “சிறியான் பயமறியான்” என்றும் இயம்புகின்றார் என்கின்றார். பயம்; அச்சப் பொருளில் வழங்கும் வடசொல்; தமிழாயின் பயன் என்று பொருள்படும். “நன்மனைதோறும் பெண்களைப் படைத்து நமனை நீ என் செயப்படைத்தாய்” என்று விவேகசிந்தாமணியும், “தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்” என்று கொன்றை வேந்தனும் கூறுதல் காண்க. கண்ணால் மருட்டித் தீநெறிப்படுத்தும் மகளிரை எமன் எனச் சொல்லி யச்சுறுத்தல் தோன்ற, “அஞ்சேல் விழியார்” என்று குறிக்கின்றார். அந்தகன் என்று கொடுமைகூறி விலக்கினும் சிறிதும் அச்சமின்றி அவரைச் சோர்ந்தொழுகுகின்றேன் என்பாராய், “மொழியை அஞ்சேன் சிறிதும்” என வுரைக்கின்றார்.
இதனால், விலக்குண்ட மகளிரொடு கூடியொழுகுவோ னெனினும் என்னை நன்னெறிப்படுத்தி ஆண்டருள்க என்றவாறு.
|