19

      19. இறைவன்பால் அன்புடைய பெருமக்கட்கு உதவுவது அன்பை மிக வளர்க்கும் செயலாகும். அதனுள், அவர்கட்கு உணவளித்துப் பசியாற்றுவது பெருமை மிக்க அறமாகும். உணவை என் வயிற்றுக் கிட்டு நிரப்பியதுண்டேயன்றிச் சிவனடியார்க்கு இட்டறியேன்; என்னைப் போல செயல்வேறுபட்டுத் திரிபவர் எவரும் இலர் எனச் சொல்லி வருந்துகிறார். அவ்வருத்தம் இப் பாட்டுருவில் தெரிகிறது.

1986.

     எந்தாய்நின் அன்பர்தமக் கின்னமுதம் இட்டேத்திச்
     சிந்தா நலமொன்றுஞ் செய்தறியேன் - நந்தாச்
     சுவருண்ட மண்போலும் சோறுண்டேன் மண்ணில்
     எவருண் டெனைப்போல் இயம்பு.

உரை:

     எந்தையே, நின்பால் அன்புடைய நன்மக்கட்கு இனிய உணவளித்துப் பரவி கெடாத நலம் யாதும் நான் செய்ததில்லை; வீழாத சுவரெடுத்தற் கிட்ட மண்போல என் உடல் வளர்த்தற்குச் சோறுண்டிருக்கிறேன்; மண்ணுலகில் என்னைப் போல்வார் யாவர் உளர்? இல்லை யல்லவா, சொல்லுக. எ.று

     அன்பு செய்பவர் சிவ ஞானிகளாதலால் அவர்களை உணவளித்துப் பேணுதல் சிவஞானத்தைப் பெருக்கும் அரிய தொண்டாதலின், “நின் அன்பர் தமக்கு இன்னமுதம் இட்டு ஏத்தி” என்றும், “சிந்தாநலம் ஒன்றும் செய்தறியேன்” என்றும் இயம்புகின்றார். சிந்தாநலம் - கெடாத நன்மை. நினைத்த நலம் புரிதல் வேண்டும் என்றற்கு இது கூறுகின்றார். சுவர்க்கு நந்துதல் - நிலைபெறாது வீழ்தல். மண்ணால் எடுத்த சுவரை இங்கே குறிக்கின்றார். மண்சுவர்க்கிட்ட மண், சுவர்க்கு உணவாய் நிலைபெற நிற்றல் போல வயிற்றிற்கிட்ட உணவு உடலை நிலைவளர்த்தல் விளங்க, “சுவருண்ட மண்போலச் சோறுண்டேன்” என்று சொல்லுகின்றார். பயனின்மைபற்றி “எவருண்டு எனைப்போல்” என உரைக்கின்றார்.

     இதனால், நான் உண்ணும் உணவு சிவத்தொண்டுக் காகாமையால் பயனின்றென உரைத்தவாறாம்.