20

      20. தமது உடல்வளத்தையும் இறைவன் அருள்வளத்தையும் எண்ணுகின்றார் வடலூர் வள்ளல். உடல்வளம் உண்ணும் உணவால் உண்டாகிறது. உணவு நல்கும் வளத்திலும் திருவருள் நல்கும் வளம் சிறந்தமையுணர்ந்து அதனைப் பெறாமையால் மனம் புண்படுகிறார். பருத்தவுடலைப் பார்த்து அருவருக்கின்றார். இப் பாட்டால் பழித்துப் பாடுகின்றார்.

1987.

     உப்பிருந்த ஓடோ ஒதியோ உலாப்பிணமோ
     வெப்பிருந்த காடோ வினைச்சுமையோ - செப்பறியேன்
     கண்ணப்ப ருக்குக் கனியனையாய் நிற்பணியா
     துண்ணப் பருக்கும் உடம்பு.

உரை:

     கண்ணப்பருக்குக் கனிபோன்றின்பம் தருபவனே, நின் திருவடியைப் பணியாமல் உண்டு பருத்த என் உடம்பு, உப்பு வைக்கும் மண்ணோடோ, ஒதி மரமோ, நடைப்பிணமோ, வெம்மை கொண்ட காடோ, வினைகளைக் கொண்ட சுமையோ, யாதென்று சொல்வேன். எ.று.

     சிவனுக்குக் கண்ணிடந்தப்பிக் கண்ணப்பராயின திண்ணனார் இங்கே கண்ணப்பர் எனப்படுகின்றார். இவர் வரலாற்றை, “தந்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்பு /பொத்தப்பி நாட்டுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும் / திண்ணப்பனாம் சிறுபேர் செய்த தவத்தால் காளத்திக் / கண்ணப்பனாய் நின்றான் காண்” என்ற வெண்பாவால் இனிதறியலாம். உணவு உண்டவழிப் பருத்தலும், உண்ணாவழிச் சிறுத்தலும் உடம்புக்கியல்பாதலின், “உண்ணப் பருக்கும் உடம்பு” என்றும், உண்டியாற் பருத்தலினும், சிவத்தொண்டாற் பெருத்தல் சிறப்பு என்பதுபற்றி “நிற்பணி யாதென்றும்” உரைக்கின்றார். வெயிலிற் காய்ந்த வழி உடம்பில் உப்புப் பூத்தலின் “உப்பிருந்த ஓடோ” என்றும், ஒதிமரம் ஒன்றிற்கும் பயன்படாமைபோல கைகால்களோடு கூடிய உடம்பும் பயன்படாமைபற்றி “ஒதியோ” எனவும் ஓதுகின்றார். சிவநினைவும் சிவப்பணியும் செய்யாது திரிதலால் “உலாப்பிணமோ” என உரைக்கின்றார். உயிர் நீங்கிய பிணத்தினின்றும் வேறுபடுத்தற்கு “உலாப்பிணமோ” என்பது வெளிப்படை. உடல் முற்றும் மயிர் முளைத்து உள்ளே வெம்மை யுற்றிருத்தலால் “வெப்பிருந்த காடோ” என்றும், வினை நிறைந்தமை பற்றி, “வினைச்சுமையோ” என்றும் கூறுகின்றார். உயிர்க்கு உறுதுணையால் வந்த உடம்பு, சிவப்பணி செய்து உய்தி பெறற்குதவாமையால் மனம் நொந்து பேசுதலால், “உப்பிருந்த ஓடோ ஒதியோ” என்பன முதலியவற்றால் இழித்துரைத்து, மேலும் சொல்ல வாராமையுற்றுச் “செப்பறியேன்” எனத் தெரிவிக்கின்றார்.

     இதனால், சிவத்தைப் பணியாத உடம்பின் சிறப்பின்மை எடுத்துப் பழித்துரைத்தவாறு.