21

      21. பருத்துச் சிவத்தொண்டிற் பயன்படா வுடம்பை நோக்கி வெறுப்புற்ற வடலூர் வள்ளலார், ஒவ்வோர் உறுப்பையும் நோக்கித் தொண்டில் ஈடுபடாமைபற்றிப் பழிக்கின்றார். சிவன் கோயிற்குச் சென்று வலம் செய்யாத கால், சிரம், துறவியாக்கை முதலியன வீண் என்று இதுமுதல் ஒன்பது பாட்டுக்களில் உரைக்கின்றார்.

1988.

     ஏலார் மனைதொறும்போய் ஏற்றெலும்புந் தேயநெடுங்
     காலாய்த் திரிந்துழலுங் கால்கண்டாய் - மாலாகித்
     தொண்டே வலஞ்செய்கழல் தோன்றலே நின்கோயில்
     கண்டே வலம்செய்யாக் கால்.

உரை:

     அன்பு மிகுந்து தொண்டு செய்வார்க்கு வெற்றி தரும் திருவடியையுடைய தோன்றலாகிய பெருமானே, உன்னுடைய திருக்கோயிலைக் கண்டு வலம்வந்து பணிபுரியாத கால்கள், பொருந்தாதவருடைய வீடுதோறும் சென்று இரந்து எலும்புதேய நெடிய காற்றுப் போல் திரிந்து வருந்தும் கால்களாம், எ.று.

     அன்புமிக்க வழி அறிவு அதன்வழி நின்று மயங்குதலின் “மாலாகி” என்றும், அதனால் மனம் அன்புப் பணிக்கண் ஒன்றி வன்மையும் வெற்றியும் திருவடிஞானத்தால் எய்துதல் கண்டு, “தொண்டே வலஞ் செய்கழல் தோன்றலே” என்றும் இசைக்கின்றார். அன்பின்கண் தோன்றித் திருவடி ஞானம் தந்து தொண்டு செய்வார்க்கு வலம் தருமாறு விளங்க, “தோன்றலே” என்ற சொற்குறிப்பு நிற்றல் காண்க. “இரத்தக்கார் காணின் இரக்க” என அறநூல் கூறுதலின், தகாதவர் உளராதல் பெறப்படும்; அவரை நம் வடலூர் வள்ளல் “ஏலார்” என எடுத்துரைக்கின்றார். அவர் மனைக்குச் சென்று இரத்தலால் துன்பமே பெருகும் என்றற்கு “மனைதொறும் ஏற்று எலும்பு தேய்தலும் காற்றாய்த் திரிந்து ஒன்றும் பெறாது மனம் வருந்துதலும் உண்டாம் என்பது புலப்பட, “எலும்பும் தேய நெடுங்காலாய்த் திரிந்துழலும்” எனக் குறிக்கின்றார். கால்கட்டு இதனினும் இழிவு பிறிதின்மை கூறுவார், “திரிந்துழலும் கால்கண்டாய்” என உரைக்கின்றார். 'எலும்பும்' என்ற விடத்து, உம்மை எச்சமாய் “மனம் நோவாதேயன்றி எலும்பும் தேய” எனப் பொருள் தருகிறது.

     இதனால், இறைவன் கோயில் கண்டு வலஞ் செய்யாக் காலாற் பயனின்மை கூறியவாறு, “கால்களாற் பயன் என்? கறைக்கண்டன் உறை கோயில், கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களாற் பயன் என்? என்?” என்று சான்றோர் பாடுவது காண்க.