22 ப

     22 பருத்துச் சிவத்தொண்டிற் பயன்படா வுடம்பை நோக்கி வெறுப்புற்ற வடலூர் வள்ளலார், ஒவ்வோர் உறுப்பையும் நோக்கித் தொண்டில் ஈடுபடாமைபற்றிப் பழிக்கின்றார். சிவன் கோயிற்குச் சென்று வலம் செய்யாத கால், சிரம், துறவியாக்கை முதலியன வீண் என்று இதுமுதல் ஒன்பது பாட்டுக்களில் உரைக்கின்றார்.

1989.

     ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயுமரைக்
     காசும் பெறவிரிக்கும் கைகண்டாய் - மாசுந்த
     விண்டுஞ் சிரங்குனிக்கும் வித்தகனே நின்தலத்தைக்
     கண்டுஞ் சிரங்குவியாக் கை.

உரை:

     உயிரைப் பற்றி நிற்கும் மலமாசு நீக்கியும் அறிவொளி நல்கியும் தலைகுனித்தாடும் பெருமானே, நின் திருக்கோயிலைக் கண்ணிற் கண்டும் தலைமேற் குவியாத கைகள், கண்டவிடத்து வைதுரைக்கும் பிறருடைய மனைமுன்றிலில் ஏங்கி நின்று, அவர் ஈவது அரைக்காசாயினும் அதனைப் பெறுதற்கு விரியும் கைகளாம், எ.று.

     உயிரைப்பற்றி இருள் செய்து மறைப்பதால், மலத்தை “மாசு” என்றும், அதனைப் புறத்தே நீக்கி ஒளியருளுதற்கு அமைந்தது சிவனது திருக்கூத்தாதலின், சிவனை “மாசு உந்த விண்டும் சிரம்குனிக்கும் வித்தகனே” என்றும் விளம்புகின்றார். குனித்தல் - கூத்தாடல். “மலம் சாய அமுக்கியருள்தாள் எடுத்து நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்தான் எந்தையார்பதம்தான்” (உண்.வி) என்று பெரியோர் உரைப்பதறிக. ஈதற்கும் மனமில்லாமையில் ஏற்பாரை ஏசுவோர் உண்மையின், “ஏசும் பிறர்” என்று உரைக்கின்றார். கொடுப்பது அரைக்காசாயினும், நெடுநேரம் ஏங்கி நின்றவிடத்தன்றிக் கொடாமைத் தோன்ற “ஏங்க ஈயும் அரைக்காசு” என்றும், அதனையும் பெறுமாறு விளங்கப் “பெறவிரிக்கும் கை” என்றும் கூறுகின்றார்.

     இதனால், சிவன் கோயில் கண்டு சிரம் குவியாக் கைகளைப் பழித்தவாறு.