23 ப
23 பருத்துச் சிவத்தொண்டிற்
பயன்படா வுடம்பை நோக்கி வெறுப்புற்ற வடலூர் வள்ளலார், ஒவ்வோர் உறுப்பையும் நோக்கித் தொண்டில்
ஈடுபடாமைபற்றிப் பழிக்கின்றார். சிவன் கோயிற்குச் சென்று வலம் செய்யாத கால், சிரம், துறவியாக்கை
முதலியன வீண் என்று இதுமுதல் ஒன்பது பாட்டுக்களில் உரைக்கின்றார்.
1990. வெங்கோடை ஆதபத்தின் வீழ்நீர் வறந்துலர்ந்து
மங்கோடை யாதல் வழக்கன்றோ - எங்கோநின்
சீர்சிந்தாச் சேவடியின் சீர்கேட்டும் ஆனந்த
நீர்சிந்தா வன்கண் நிலை.
உரை: எங்கள் கோமானாகிய நினது சிறப்புக் குன்றாச் சேவடியின் புகழ் கூறக்கேட்டும் ஆனந்தக் கண்ணீர் சொரியாத வன்கண்மையுடைய கண்களின் நிலை, வெவ்விய கோடைக் காலத்து வெயிலால் மழைநீர் வறண்டு உலர்ந்துள்ள ஈரமில்லாத ஓடைபோலும் இயல்பினதாகும், எ.று.
கோ - கோமானாகிய தலைவன்; இங்கே சிவபெருமான் மேற்று, சீர் - சிறப்பு; புகழ் எல்லாம் ஒரு பொருளே குறிப்பன. சீர் சிந்தாமை - சிறப்புக்குறையாமை. சீர்கேட்டல்- புகழ்களை அன்புடையார் கேட்போர் மனம் உருக எடுத்துரைக்கக் கேட்டல். உள்ளத்தே உவகைமிக்க வழிக்கண்ணில் நீர்பெருகிச் சொரிதல் ஈரமுடைய நெஞ்சுடையார்க் கியல்பு. அஃது இல்லாமை புலப்பட, “சீர்கேட்டும் ஆனந்தநீர் சிந்தா வன்கண்” என்று கூறுகின்றார். நீர் சொரியாமைக்கு ஏது உள்ளத்து ஈரமின்மையேயன்றிப் பொருந்தியிருக்கும் வன்கண்மையுமாம் என்றற்கு, “வன்கண்நிலை” எனவுரைக்கின்றார். நீர் சொரியாக் கண்ணின் இயல்பை நீர்வற்றிப் புலர்ந்து தோன்றும் ஒடையை யுவமம் செய்து காட்டலுற்று, “நீர் வறந்து உலர்ந்து மங்கு ஓடையாதல் வழக்கன்றோ” என்று கூறுகின்றார். மங்கு ஓடை - வறண்டு பொலிவின்றித் தோன்றும் நீரோடை.. வழக்கென்றது உவம வாய்பாடாய் நின்றது. வீழ்நீர் - விரும்பப்படும் நீர்; மழை நீருமாம். நீர் வறத்தற்குக் கோடை வெயில் காரணமாதலின், “வெங்கோடை யாதபத்தின்” என வுரைக்கின்றார். ஆதபம் - வெயில். வெம்மை மிக்க முதுவேனிற் போதினை, “வெங்கோடை” என்று குறிக்கின்றார். மாரிக்காலத்து நிறையப் பெற்ற நீரைக் கோடைக் காலத்தில் தெளிநீராய் உதவுவது நீரோடைக்குச் சிறப்பு. அஃதின்றி வறந்துலர்ந்து ஈரமின்றிக் கெடுதல் பற்றி “மங்கோடை” யென இகழ்கின்றார்.
இதனால், இறைவன் திருவடிப் புகழ் கேட்டு உவகைநீர் சொரியாத கண்ணின் வன்கண்மை காட்டிப் பழித்தவாறு.
|