24

      24. பருத்துச் சிவத்தொண்டிற் பயன்படா வுடம்பை நோக்கி வெறுப்புற்ற வடலூர் வள்ளலார், ஒவ்வோர் உறுப்பையும் நோக்கித் தொண்டில் ஈடுபடாமைபற்றிப் பழிக்கின்றார். சிவன் கோயிற்குச் சென்று வலம் செய்யாத கால், சிரம், துறவியாக்கை முதலியன வீண் என்று இதுமுதல் ஒன்பது பாட்டுக்களில் உரைக்கின்றார்.

1991.

     வாயன்றேல் வெம்மலஞ்செல் வாய்அன்றேல் மாநரக
     வாயன்றேல் வல்நெறிநாய் வாயென்பாம் - தாயென்றே
     ஊழ்த்தாதா ஏத்தும் உடையாய் சிவஎன்றே
     வாழ்த்தாதார் நாற்றப்பாழ் வாய்.

உரை:

      தாயே என்று தலைவிதியை எழுதும் பிரமன் பரவும் ஏற்றமுடையவனே, சிவா என மொழிந்து வாழ்த்தாதாருடைய தீநாற்றம் நாறும் பாழ்த்த வாய், வாயன்று; வெவ்விய மலம் கழியும் வாயுமன்று; பெரிய நரகத்தின் வாயன்று ; வன்மை கொண்ட வெறிநாயின் வாய் என்று சொல்லலாம். எ.று.

     தாதா எனப்படும் பிரமதேவன் அவரவர்க்குரிய இன்பதுன்பக் கூறுகளைத் தலையில் எழுதிவிடுக்கின்றான் என்னும் உலகியல் வழக்குப் பற்றி அவனை, 'ஊழ்த்தாதா' என்றும் குறிக்கின்றார். ஊழ் - விதி. தாதாவின் ஏத்து - தாதா ஏத்திப் பரவும் ஏற்றம். சிவசிவ என்று சொல்லி வாழ்த்தும் வாய் ஞான நறுமணம் கமழும் மங்கலத் திருவாய்; அல்லாத வாய் தீநாற்றம் நாறும் பாழ்த்தவாய் என்றவர்; அதனோடு நில்லாது பல கூறி இழித்துரைக்கின் றாராகலின், “வாயன்றேல் வெம்மலஞ் செல்வாய்; அன்றேல் மாநரக வாய்; அன்றேல் வல்நெறி நாய்வாய் என்பாம்” என்று வசை கூறுகின்றார். 'சிவாய' என்றவழி வாயின்கண் திருவிளங்கும் என்பது விளங்கத் “திருவாய் பொலிய சிவாயநம என்று நீறணிந்தேன்” என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.

     இதனால், சிவனை வாழ்த்தாத வாய் நாற்றப் பாழ்வாய் என்றும், வல்நெறி வாய் என்றும் பழித்துரைத்தவாறு.