25
25. பருத்துச் சிவத்தொண்டிற்
பயன்படா வுடம்பை நோக்கி வெறுப்புற்ற வடலூர் வள்ளலார், ஒவ்வோர் உறுப்பையும் நோக்கித் தொண்டில்
ஈடுபடாமைபற்றிப் பழிக்கின்றார். சிவன் கோயிற்குச் சென்று வலம் செய்யாத கால், சிரம், துறவியாக்கை
முதலியன வீண் என்று இதுமுதல் ஒன்பது பாட்டுக்களில் உரைக்கின்றார்.
1992. வீட்டார் இறைநீ விடைமேல் வரும்பவனி
காட்டா தடைத்த கதவன்றோ - நாட்டாதி
நல்லத் துளையா நதிச்சடையா என்னுஞ்சீர்ச்
செல்லத் துளையாச் செவி.
உரை: அறிவு நூல்களால் நாட்டப்படும் ஆதி முதல்வனே, நல்லம் என்னும் திருப்பதியில் எழுந்தருளும் ஐயனே, கங்கையாறு தங்கிய சடையையுடையவனே என்றெல்லாம் ஓதப்படும் புகழுரைகள் புகும் பொருட்டுத் துளைக்கப்படாத காதுகள், முற்றத்துறந்த முனிவர்க்குத் தலைவனாகிய நீ விடைமேல் வரும் திருவுலாவைக் கண்ணாற் காணவொண்ணாது அடைக்கும் கதவாகும். எ.று.
நாட்டு ஆதி - அறிவு நூல்களால் சித்தாந்தம் செய்து காட்டப்படும் ஆதி முதல்வன். நாட்டு மக்கட்கு ஆதியாகிய பரமன் எனினுமாம். நல்லம் - சிவன் உறையும் திருப்பதிகளில் ஒன்று; அதனை, “பாடச் சீர்வல்ல தமிழ்ப்புலவர் மன்னி வணங்கும் திருநல்லம்” (விண். கலி. 99) என்று பரிந்துரைப்பர். 'கேள்வியால் துளைக்கப்படாத செவி, கேட்பினும் கேளாத் தகையவாம்' எனத் திருவள்ளுவர் கூறுதலால், “சீர் செல்லத் துளையாச் செவி” எனச் சொல்லுகின்றார். சீர்கேட்டுத் துளைபடாத செவியை “அடைத்த கதவு” என இகழ்கின்றார். விட்டார் - துறவிகள். “துறவர் வணங்கும் புகழான்” எனப் பிறிதோரிடத்திற் புகழ்தலின், ஈண்டு “விட்டார்” என விளம்புகின்றார். பவனி - உலா. திருவுலாக் காட்சி காண்பார் மனம் பக்குவமெய்துவிக்குமென்பது மரபு. அக்காலத்தே காணாதவாறு கதவு அடைத்தல் தீது; அதுபற்றியே, “விடைமேல் வரும் பவனி காட்டாதடைத்த கதவன்றோ” என வுரைக்கின்றார். பிறிதோரிடத்தில், “நீலக்களத்தார் திருப்பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான் சாலப் பசித்தார் போன் மனந்தான் தாவியவர் முன் சென்றதுவே” (திருவுலா, வியப்பு) என வள்ளலாரும், “நையாத மனத்தினை நைவிப்பான் இத்தெருவே ஐயாநீ உலாப்போந்த அன்று முதல்” (கருவூர்) என்று பிறரும் உரைப்பதனால் திருவுலாக் காட்சி நலத்தை விளக்குவது காண்க.
இதனால், இறைவன் சீர் கேட்டுத் துளைபடாச் செவியின் பயனின்மை தெரிவித்தவாறு. “எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ” என்று நாவரசர் கூறவது காண்க.
|