26
26. பருத்துச் சிவத்தொண்டிற்
பயன்படா வுடம்பை நோக்கி வெறுப்புற்ற வடலூர் வள்ளலார், ஒவ்வோர் உறுப்பையும் நோக்கித் தொண்டில்
ஈடுபடாமைபற்றிப் பழிக்கின்றார். சிவன் கோயிற்குச் சென்று வலம் செய்யாத கால், சிரம், துறவியாக்கை
முதலியன வீண் என்று இதுமுதல் ஒன்பது பாட்டுக்களில் உரைக்கின்றார்.
1993. புல்லங் கணநீர்ப் புழையென்கோ புற்றென்கோ
சொல்லும் பசுமட் டுளையென்கோ - சொல்லுஞ்சீர்
வீயாத பிஞ்ஞகப்பேர் மெல்லினத்தின் நல்லிசைதான்
தோயாத நாசித் துளை.
உரை: சொல்லப்படும் சிறப்புக்கெடாத பிஞ்ஞகன் என்ற பெயரின் கண் அமைந்த மெல்லெழுத்தின் நல்லிசை பொருந்தாத மூக்குத்துளையை புல்லிய சாக்கடைநீர் செல்லும் துவாரம் என்பேனா, புற்றென்பேனா, வேறாகப்
பேசும் பசிய மண்ணின் துளையென்பேனா? என்னென்பேன்? எ.று.
சிவபிரானுக்குரிய சிறப்புப் பெயர்களில் பிஞ்ஞகன் என்பது ஒன்று; இதனை இனிதுரைக்க வேண்டின் மூக்கிசை கலத்தல் வேண்டும் . கலவா வழிப் பெயரிடத்து மெல்லோசை இனிமை தாராதென்றற்குப் “பிஞ்ஞகப் பேர் மெல்லினத்தின் நல்லிசை” என வுரைக்கின்றார். இதனை இனி தொலிக்காத நாசித்துளை பயனில்லதென்றற்கு “நல்லிசைதான் தோயாத நாசித்துளை” என்று கூறுகின்றார். பயனில் வழி, அந்த நாசித்துளையைக் கழித்து விடப்படும் சாக்கடை நீர் கழிதற்கமைந்த துவாரம் எனலாம் என்பார், “அங்கணநீர்ப் புழையென்கோ” என்றும், அங்கணநீர் அழுக்கு நிறைந்து புறத்தே கழித்து நீக்கப்படுவது பற்றி, “புல்லங்கணநீர்” என்று புகல்கின்றார். புழை - துவாரம், துளைவழி. உள்ளே புழையுற்று மேலே உயர்ந்து நிற்றலிற் புற்று மூக்கிற்குவமாயிற்று. ஈரமண்ணில் இருவிரல்கள் நுழைத்துப் புழை செய்தது போறலின் நாசித்துளையைப் “பசுமண் துளையென்கோ” என்று இயம்புகின்றார். பிஞ்ஞகன் என்ற பெயரைச் சொல்லவியலாமல் பிஞ்சன் என்று சொல்லும் தமிழறிஞரும் பலர் உண்டு.
இதனால், மூக்கிசைபற்றிப் பிஞ்ஞகன் என்ற பெயரை யுரையாதார் மூக்கின் நற்பயன் இன்மை உரைத்தவாறு.
|