27

      27. பருத்துச் சிவத்தொண்டிற் பயன்படா வுடம்பை நோக்கி வெறுப்புற்ற வடலூர் வள்ளலார், ஒவ்வோர் உறுப்பையும் நோக்கித் தொண்டில் ஈடுபடாமைபற்றிப் பழிக்கின்றார். சிவன் கோயிற்குச் சென்று வலம் செய்யாத கால், சிரம், துறவியாக்கை முதலியன வீண் என்று இதுமுதல் ஒன்பது பாட்டுக்களில் உரைக்கின்றார்.

1994.

     தோற்றமிலாக் கண்ணுஞ் சுவையுணரா நாவுநிகழ்
     நாற்றம் அறியாத நாசியுமோர் - மாற்றமுந்தான்
     கேளாச் செவியுங்கொள் கீழ்முகமே நீற்றணிதான்
     மூளாது பாழ்த்த முகம்.

உரை:

      திருநீற்றணியால் விளக்கமுறாமல் பாழுற்ற முகம். பார்வையிலாத குருட்டுக் கண்ணும், சுவையுணர்ச்சியிழந்த நாவும், நாற்றவுணர்வில்லாத மூக்கும், ஒரு சொல்லையும் கேளாத செவிட்டுச் செவியும் கொண்டு கீழ்மையுற்ற முகமாகும். எ.று.

     தோன்றுகின்றவற்றைக் காண்டற்கில்லாத குருட்டுக் கண்ணைத் “தோற்றம் இலாக் கண்” எனவும், சுவையுணரும் புலனுணர்வில்லாத நாக்கினைச் “சுவையுணரா நா” எனவும் உரைக்கின்றார். மூக்காகிய பொறிக்குப் புலனுணர்வு நாற்றம் அறிதல்; அவ் வுணர்வில்லாத மூக்கை “நிகழ்நாற்றம் அறியாத நாசி” என நவில்கின்றார். பிறர் சொல்லும் ஓசையை ஏலாத செவியை “ஓர் மாற்றமும் கேளாச் செவி” என்று உரைக்கின்றார். முகத்திற்கு ஒளியும் அழகும் பொலிவும் தந்து உயர்த்துவன கண் முதலாகக் கூறப்பட்ட பொறிகள்; அவை செவ்வையாக அமையாத முகம் உயர்விழந்து கீழ்மை யுறுவதுபற்றிக் “கீழ்முகம்” எனக் கிளந்துரைக்கின்றார். மூளுதல் - மிகுதல். திரிநீற்றணியால் பொலிவு மிகாத வழிப் பாழ்படுதலால் “நீற்றணி மூளாது பாழ்த்த முகம்” என்று கூறுகின்றார். இதனால் நீறணியாது பாழ்த்த முகம் 'கீழ்முகம்' என இழித்துரைத்தவாறு.