28

       28. பருத்துச் சிவத்தொண்டிற் பயன்படா வுடம்பை நோக்கி வெறுப்புற்ற வடலூர் வள்ளலார், ஒவ்வோர் உறுப்பையும் நோக்கித் தொண்டில் ஈடுபடாமைபற்றிப் பழிக்கின்றார். சிவன் கோயிற்குச் சென்று வலம் செய்யாத கால், சிரம், துறவியாக்கை முதலியன வீண் என்று இதுமுதல் ஒன்பது பாட்டுக்களில் உரைக்கின்றார்.

1995.

     மான்றாம் உலக வழக்கின் படிமதித்து
     மூன்றா வகிர்ந்தே முடைநாற - ஊன்றா
     மலக்கூடை ஏற்றுகினு மாணாதே தென்பால்
     தலக்கூடல் தாழாத் தலை.

உரை:

     தென் திசையிலுள்ள தலமாகிய மதுரையம்பதியை வணங்காத தலை . மயக்கத்தையுடைய உலக வழக்கின்படி மூன்றாகப் பகுத்து முடை நாறுகின்ற மலம் நிறைந்த கூடையை நன்கு ஊன்றும் படி தலையில் ஏற்றினாலும் ஒவ்வாதாகும். எ.று.

     தென்னாட்டு மதுரை நகரை “தென்பால் தலக்கூடல்” என்று சிறப்பிக்கின்றார். மதுரை நகர்க்குக் கூடல் என்பதும் ஒரு பெயர். கூடலை வணங்குதலாவது கூடல் நகரத்துக் கோயில் கொண்டருளும் சொக்கநாதன் திருவடிவை வணங்குவதாகும். மான்ற - மால் என்னும் சொல்லடியாக வந்த பெயரெச்ச வினை. மாலுதல் - மயங்குதல். “மாலும் என்நெஞ்சு” (குறள்) என்பது காண்க. தலையை மூன்றாக வகுத்துச் சீவுதல் தெளிவில்லாத மக்கள் செயல்; அதனை “மான்றாம் உலக வழக்கு” என்று கூறுகின்றார். மிகு சினத்தால் மயங்கியோர் தலையை மூன்றாக வகிர்ந்து மொட்டையடிப்பேன் என வழங்குவதுண்மையின் “உலக வழக்கன்படி மதித்து மூன்றாவகிர்ந்து” என்று மொழிகின்றார். தீநாற்ற முடைய மலக்கூடையைத் தலையில் ஏற்றுவதை, “முடைநாற மலக்கூடை யேற்றுகினும்” என்றார். ஊன்ற என்ற்பாலது ஊன்றா என வந்தது. கூடை நிறையாவழித் தலையில் “ஊன்றாதாகலின், மலம் நிறைத்த கூடையென்பது புலப்பட “ஊன்றா மலக்கூடை யேற்றுகினும்” என்று சொல்லுகின்றார். கூடற்கண் சிவனடிக்கீழ்த் தாழாத் தலைக்கு மலம் நிறைத்துச் சுமக்கும் தலையும் ஒத்த தாகாது உயர்வுடைத்தாம் என்பது தோன்ற, “மாணாதே” என உரைக்கின்றார்.

     இதனால், சிவனை வணங்காத் தலை மலைக்கூடை சுமக்கும் தலையினும் இழிந்ததென்றவாறு.