29
29. பருத்துச் சிவத்தொண்டிற் பயன்படா வுடம்பை நோக்கி வெறுப்புற்ற
வடலூர் வள்ளலார், ஒவ்வோர் உறுப்பையும் நோக்கித் தொண்டில் ஈடுபடாமைபற்றிப் பழிக்கின்றார்.
சிவன் கோயிற்குச் சென்று வலம் செய்யாத கால், சிரம், துறவியாக்கை முதலியன வீண் என்று இதுமுதல்
ஒன்பது பாட்டுக்களில் உரைக்கின்றார்.
1996. கல்லென்கோ நீரடைக்குங் கல்லென்கோ கான்கொள்கருங்
கல்லென்கோ காழ்வயிரக் கல்லென்கோ - சொல்லென்கோ
இன்றா லெனிலோ எடுத்தாளெம் மீன்றாணோர்
நின்றாள் நினையாத நெஞ்சு.
உரை: எடுப்பாரில்லாதபோது தானே வந்து எடுத்தாளும் ஈன்ற தாய் போல் அருள் செய்யும் நின்னுடைய திருவடியை நினையாத நெஞ்சினை, கல்லென்பேனா, நீர்வரும் கால்வாயைடைக்கும் கல்லென்பேனா, காட்டிடத்தே கிடக்கும் கருங்கல் என்பேனா, காழ்ப்புற்ற வயிரக்கல்லென்பேனா, சொல்லுக என்பேனா? எ.று.
தளர்ந்தவிடத்து எடுத்து ஆதரிப்பார் இல்லாதபோது, இறைவன் தன்னை நம்பினோரை எடுத்தாளுவது உலகறிந்த வுண்மையாதலால், “இன்றால் எனிலோ எடுத்து ஆள் எம் ஈன்றாள்நேர் நின்தாள்” என வுரைக்கின்றார். எடுத்தாளுதல் கூறினமையின், இன்றால் என்றற்கு எடுப்பார் என்பது வருவித்து இயைக்கப்பட்டது. ஆளும் செயலை விளக்குதற்கு “எடுத்தாளும் ஈன்றாள் நேர்” என உவமம் கூறிக் காட்டுகின்றார். ஈன்றாள் போல் எடுத்தாளும் இறைவன் திருவடியை மறத்தலாகாது; மறக்கும் நெஞ்சினை “நினையாத நெஞ்சு” என்று சொல்லி, அதன் இழி செயலைப் பழித்தற்குக் “கல்லென்கோ” எனப் பொதுபடக் கூறியமையாது , நீர் வருவாயை யடைத்தற்குப் பயன்படும் கல்லென்பேனா என்பாராய், “நீர் அடைக்கும் கல்லென்கோ” என வினவுகின்றார். மறவா வழிவரும் நலமனைத்தையும் மறதியால் அடைக்குமாறு தோன்ற “நீரடைக்கும் கல்லென்பது” நிற்கிறது. நன்றி மறத்தல் முதலிய தீய எண்ணங்கள் நிறைந்து இருண்டு கிடக்குமாறு புலப்பட, “கான்கொள் கருங்கல்லென்கோ” என உரைக்கின்றார். உள்குமுணர்வின்றி உறைப்புண்டிருக்குமாறு விளங்கக் “காழ்வயிரக் கருங்கல்லோ” எனக் கசந்து கூறுகின்றார். நினைத்துச் சொல்லுதற்கு விருப்பின்மை புலப்படச் “சொல்லென்கோ” என உரைக்கின்றார்.
இதனால், இறைவன் அருள் துணைபுரியும் திருவடியை நினையாத நெஞ்சினைப் பழித்தவாறு, “துருக்கலோ கொடுங்கருங்கலோ வயிரச் சூழ்கலோ எனக் காழ்கொளு மனத்தேன்” (ஆறாந். ஆற். 3 : 8) எனப் பிறிதோரிடத்தில் கல்லுவமை வருவது காண்க
|