30
30. சிவன்பால் அன்புகொண்டோர்
உணவுகொள்ளும் நிலையிலும் நினைவு மாறுவதிலர். உண்ணும் சோற்றைக் காணுன்போதும் சிவபெருமான் திருவடியை
நினைந்து உண்பர். அது செய்யாதுண்பது நஞ்சாயத் தீது செய்யும் என உரைக்கின்றார்.
1997. சொல்லுகின்ற உள்ளுயிரைச் சோர்வுற் றிடக்குளிர்ந்து
கொல்லுகின்ற நஞ்சில் கொடிதன்றோ - ஒல்லுமன்றத்
தெம்மானின் தாட்கமல மெண்ணாது பாழ்வயிற்றில்
சும்மா அடைக்கின்ற சோறு.
உரை: காண்டற்கமைந்த அம்பலத்தில் விளங்கும் எம்மானாகிய நின் திருவடித் தாமரைமலரை நினையாமல் பாழ்த்த வயிற்றில் வெளிதே பெய்து அடைக்கின்ற சோறு, சொல்லுகின்ற உடற்குள் நிலவும் உயிரைச் சோர்வடையுமாறு குளிர்வித்துக் கொல்லும் நஞ்சினும் கொடிதாகும். எ.று.
இறைவன் திருக்கூத்தியற்றும் திருவம்பலம் யாவரும் கண்டு பரவுமாறு அமைந்திருப்பதுபற்றி “ஒல்லும் மன்றம்” என வுரைக்கின்றார். எம்மான் - எம்மையுடைய மேலோன், தாட்கமலம் - தாளாகிய கமலம். கமலம் - தாமரை. திருவடியை நினையாமல் இடப்படும் உணவு மங்கல மிழந்து பாழ்படுதலால், அது சென்றடையும் வயிறு “பாழ்வயிறு” எனப்படுகிறது. 'சிவாயநம' என்று சிந்தித்துண்ணுமிடத்து, உணவைத் தீண்டும் கையும், மென்றுண்ணும் வாயும், சென்றடையும் வயிறும் சிவமயமாம் என்பது தெளிக. சிவசிந்தனையின்றி யுண்பதைச் “சும்மா அடைக்கின்ற சோறு” என இகழ்கின்றார். உண்ணப்படும் சோறு, உடலுக்கும் அதன் உண்ணின்றியலும் உயிர்க்கும் ஆற்றல் விளைவிக்கும் தொடர்புடையது; சிவனை நினையாதடைக்கும் சோறு சிவனது அருளாற்றல் பயக்கும் அமுதமாகாது உயிர்க்குச் சோர்வையும் உடற்கு நோயையும் விளைத்தலின், அதனை நஞ்செனப் பழித்துக் “கொல்லுகின்ற நஞ்சிற் கொடிதன்றோ” என்று கூறுகின்றார். சோர்வும் குளிர்ச்சியும் பயந்துகொல்வது நஞ்சின் செயலாதலால் “உள்ளுயிரைச் சோர்வுற்றிடக்குளிர்ந்து கொல்லுகின்ற நஞ்சு” என இயம்புகின்றார். உடலின் உள்ளூறும் உயிர் உருவில்லதாயினும், உளதென உணர்ந்துரைக்கப் படுவது கொண்டு சொல்லுகின்ற “உள்ளுயிர்” என உரைப்பாராயினர்.
இதனால், சிவனை நினையாது உண்ணும் சோறு நஞ்சினும் கொடிது எனப் பழித்தவாறு.
|