31
31. சிவன்பால் அன்புகொண்டோர்
உணவுகொள்ளும் நிலையிலும் நினைவு மாறுவதிலர். உண்ணும் சோற்றைக் காணுன்போதும் சிவபெருமான் திருவடியை
நினைந்து உண்பர். அது செய்யாதுண்பது நஞ்சாயத் தீது செய்யும் என உரைக்கின்றார்.
1998. சோர்படைத்துச் சோறொன்றால் தொண்டைவிக்கிக் கொண்டுநடு
மார்படைத்துச் சாவுகினும் மாநன்றே - சீர்படைக்க
எண்ணுவார் எண்ணும் இறைவாநின் தாளேத்தா
துண்ணுவார் உண்ணும் இடத்து.
உரை: புகழ் நிறுவி வாழக் கருதுபவர் நினைந்தேத்தும் இறைவனே, நின் திருவடியை பரவாது உண்பவர் சோறுண்ணம்போது சோர்வுண்டாக்கி ஒரு சோற்றால் தொண்டை விக்குதலுற்று நடுவாகிய மார்பு அடைப்புண்டு சாவதாயினும், அது மிகவும் நன்றாம். எ.று.
புகழுண்டாக வாழ்வது உடம்பொடு கூடி யுலகில் உழைத்துண்டு வாழ்பவர் பெறக்கூடிய ஊதியம் என்பர் சான்றோர். அவர்களை நம் வள்ளற்பெருமான், “சீர்படைக்க எண்ணுவார்” எனக் குறிக்கின்றார். உண்ணும்போதும் உறங்கச் செல்லும்போதும் விழிக்கும்போதும் இறைவன் திருப்பெயரை நினைந்து பரவுவராதலின் “எண்ணும் இறைவா” என்றும், உண்பவருள் சிவனை நினையா துண்ணுபவர்களை விதந்தெடுத்து, அவர்கள் உண்ணும்போது சாவின் நன்று என்றற்கு “ஏத்தாது உண்ணுவார் உண்ணுமிடத்துச் சாவுகினும் மாநன்று” எனக் கூறுகின்றார். சாவுக்குக் காலம் இது என்ற வரையறையின்மை பற்றி, உண்ணும் போதினை எடுத்துரைக்கின்றார். நோயுற்றிருப்பது பெரும்பான்மையாக, உண்ணும்போது எங்ஙனம் இறப்பு நிகழும் என்பதை விளக்கற்கு, உண்டவிடத்து சோர்பு நீக்கும் சோறு உண்ணும்போது சோர்பு உண்டாக்குத லுண்டடென்றற்குச் “சோர்பு அடைத்து” என உரைக்கின்றார். அடைவிடத்து எனற்பாலது அடைத்தென வந்தது. அந்நிலையில் ஒரு சோறே தொண்டையிற் சிக்கி உயிரைப் போக்கும் என்பார், “சோறென்றால் தொண்டை விக்கிக்கொண்டு நடுமார்பு அடைத்து” என்றும், அச்சாவு உண்பதைத் தடுக்கும் பாவச்செயலன்று; சாகின்றவர்க்கு மிகவும் நன்று என்பாராய், “சாவுகினும் மாநன்று” என்றும் கூறுகின்றார். சாவுகினும் என்றவிடத்து, உம்மை இறைவனை நினையாதுண்பார் அங்ஙனம் சாகார், கடு நோயுற்று உற்றாரும் உறவினரும் இகழ்ந்து எப்போது சாவர் என நினைந்து வெறுக்குமளவு கிடந்து சாவர் என்பதுபட நிற்றலின், எதிர்மறை. உயிர் நீங்கும்போதும் இறைவனை மறவாமை வேண்டும் என விழைவாராய், “வரையார் மடமங்கை பங்கா கங்கை மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம், உரையா உயிர்போகப் பெறுவேனாகில் உறுநோய் வந்தெத்தனையு முற்றாலென்னே” (திருவாவடுதுறை) என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.
இதனால், இறைவனை நினையாதுண்பார் உண்ணும்போது இறப்பராயின் அது மிகவும் நன்று என்றவாறு.
|