32

      32. சிவநெறிக்கண் நின்று சிவபிரான் திருவடியை நினைந்து உண்பதும் உறங்குவதும் செய்யும் சைவ வொழுக்கத்தைக் கைவிட்டாரோடு உடன் உண்பதும், இருந்துண்பதும், அவர் மனைக்கண் சென்றுண்பதும் குற்றம் எனக் கூறுகின்றார். 

1999.

     ஓகோ கொடிதே உறும்புலையர் இல்லினிடத்
     தேகோ வதைத்துண் செயலன்றோ - வாகோர்தம்
     வாழ்மனையில் செல்லாது வள்ளனினை ஏத்தாதார்
     பாழ்மனையில் சென்றுண் பது.

உரை:

      உயர்ந்தோர் வாழ்கின்ற மனைக்குச் செல்லாமல் வள்ளலாகிய சிவனைப் பரவாதாருடைய பாழ்த்த மனைக்குட் சென்று அவர் தரும் உணவை யுண்பது கொடுமை செய்யும் புலையருடைய இல்லின்கண் பசுவொன்றைக் கொன்றுண்ணும் செயலாம். எ.று.

     ஓகோ : இரக்கக் குறிப்புடைய இடைச் சொல். கொடிதோறும் புலையர் என்றவிடத்து, ஏகாரம் நல்லதை விலக்கி நிற்றலின், பிரிநிலை. புலையர் - புலாலுண்போரில் பசுவைக் கொன்றுண்பவர். “பொல்லாப் புலாலை யுண்ணும் புலையர்” என்று புலாலுண்போர் அனைவரையும் குறிப்பர் திருமூலர். உண்செயல் - உண்ணும் செய்கை. அன்றும்; எதிர்மறை ஓவும் சேர்ந்து, ஆம் என உடன்பாட்டுப் பொருள் தந்தன. வாகு - உயர்பு . இங்கே சிவனடி மறைவாச் சிந்தையால் உயர்ந்தோர்களை, “வாகோர்” என உரைக்கின்றார். வாழ்மனை - “அகனமர்ந்து செய்யாள் உறையும்” நன்மனை; பாழ்மனை - சிவனை நினையாதார் மனை. சிவப்பொலிவின்மையாற் பாழ்மனையாயிற்றென்க. பாழ்மனையில் உண்பது என்பதே அமையுமாயினும், சென்றென்றது, செல்வதும் தீது என்று இழித்தற்கென அறிக.

     இதனால், சிவனை நினையாதார் மனையின்கண் உணவு உண்பது குற்றம் எனப் பழித்தவாறாம்.