33

      33. சிவன்றாள் வழிபடுவார் அணியும் திருவெண்ணீறணியார் உறவும் கூடாது என்பது வள்ளலார் கருத்து. அப்பெற்றியார் மனையடைந்து அவரோடு உடனிருந்துண்பது குற்றம் எனப் பாடுகின்றார்.

2000.

     வீயுமிடு காட்டகத்துள் வேம்பிணத்தின் வெந்தசையைப்
     பேயுமுடன் உண்ண உண்ணும் பேறன்றோ - தோயுமயல்
     நீங்கஅருள் செய்வோய்வெண் ணீறணியார் தீமனையில்
     ஆங்கவரோ டுண்ணு மது.

உரை:

     மலவிருள் காரணமாக உண்டாகும் மயக்கம் நீங்க அருள் ஞானம் நல்கும் பெருமானே, வெண்ணீ றணியாதாருடைய பொல்லாத மனையின்கண் அவரோடே கூடியிருந்து உண்பன உண்பது, செத்தாருடம்பை யழிக்கும் ஈமத்தின்கண் தீயில் வேகும் பிணத்தினுடைய வெவ்விய தசையைப் பேய்கள் உடனிருந்துண்ண உட்கொள்ளும் தீச்செயலாகும்.

     மயல் - மயக்கம்; இயற்கை மலவிருளால் உயிரறிவு மறைப்புண்ணப் பிறக்கும் மயக்கம் . மலமறைப்பினைத் திருவருள் தன் ஒளியால் அவ்வப் போது நீக்கி யுண்மை யுணரச்செய்யும்; அதுதானும் இறைவன் திருமுன் நிகழ்வது பற்றி, “தோயு மயல்நீங்க அருள்செய் வோய்” என்று பரவுகின்றார். மங்கலமில்லாத மனையென்றற்குத் “தீமனை” என்று செப்புகின்றார். அவரோடு உடனிருந்து வெண்ணீறணியாமை கண்டும் உண்பது பொல்லாது என்பது புலப்படப் “பேயும் உடனுண்ணவுண்ணும் பேறு” எனப் பேசுகின்றார். செத்தார் உடம்பைப் புதைக்குமிடம் இடுகாடு; எரிக்குமிடம் சுடுகாடு. இரண்டுக்கும் நிலம் ஒன்றேயாதலின் “இடுகாட்டகத்தில் வேம்பிணம்” என்று கூறுகின்றார். ஈமத்தின்கண் செத்தாருடம்பு அழிக்கப்படுதலின், “வீயும் இடுகாட்டகத்துள்” எனச் சிறப்பிக்கின்றார். செத்த பிணத்தின் தசையைப் பேயுண்ணும் என்பது பண்டையோர் கொள்கை. ஒருகாலத்தே நம் நாட்டில் பிணந்தின்னும் பேய்மக்கள் வாழ்ந்தனர்; அவர்களை அரக்கரெனப் புராணங்கள் உரைக்கின்றன. இப்போது அவர் கூட்டம் அற்றுப் போயிற்று.

     இதனால், வெண்ணீறணியார் மனையில் உணவு கொள்வது தீதென வெறுத்தொதுக்கியவாறு.