34
34. சிவனது திருப்புகழை வேண்டாதார்
கடுநரகத் துன்பம் எய்துவர் என்பதைக் கேட்குமுளம் அஞ்சுமாறு கிளந்து கூறுகின்றார்.
2001. கண்குழைந்து வாடும் கடுநரகின் பேருரைக்கில்
ஒண்குழந்தை யேனுமுலை உண்ணாதால் - தண்குழைய
பூண்டாதார்க் கொன்றைப் புரிசடையோய் நின்புகழை
வேண்டாதார் வீழ்ந்து விரைந்து.
உரை: தளிர்களையுடை கொன்றையின் தேன் பொருந்திய பூமாலையாகிய பூணாரத்தையும் புரிசடையையும் உடைய பெருமானே, நின் புகழை விரும்பாதவர் விரைந்து சென்று வீழ்ந்து கண்கலங்கி வருந்தும் கடிய நரகத்தின் பெயரை உரைத்தால், ஒள்ளிய சிறுகுழந்தையும் தன் தாயின் முலைப்பாலை யுண்ணாது காண். எ.று.
குழை - இளந்தளிர். தாது - தேன் . கொன்றை மாலையைப் பூணாகக் கொண்டவனாதலின், சிவபெருமானைப் “பூண்தாதார் கொன்றைப் புரிசடையோய்” என உரைக்கின்றார். “தாதார் கொன்றை தயங்குமுடியர்” (கயிலாயம்) என்பர் ஞானசம்பந்தர். தண்குழைய கொன்றை, தாதார் கொன்றை என இயையும், தண் குழைய பூண் என இயைத்துத் தண்ணிய குழையாகிய பூணும், கொன்றை மாலையும், புரிசடையும் உடையோய் என்று முடிப்பினும் அமையும். “வேண்டாதார் விரைந்து வீழ்ந்து வாடும் கடுநரகு” என இயையும் . இறைவன் புகழை விரும்பாதவர், விரும்பாத குற்றத்துக்காகக் கடுநரகில் வீழ்ந்து வாடுவர் என்பது கருத்து. உயிர் நீத்தற்கும் நரகில் வீழ்தற்கும் இடையீடு சிறிதுமின்மை தோன்ற, “விரைந்து வீழ்ந்து” என்றும், அதன்கண் அவர்கள் கண்கெட்டுக் குழம்பி வருந்துவரென்பார், “கண்குழைந்து வாடும்” என்றும் கூறுகின்றார் . இவ் வேண்டாதார் வீழும் கடுநரகிற்குப் பெயருண்டெனினும், வள்ளலார் அதனைக் கூற மறுத்து, அதனைக் கேட்கின் பால் மாறாத இளங்குழவிகளும் அஞ்சிப் பாலுண்ணாதொழியும் என்பாராய், “கடுநரகின் பேருரைக்கின் ஒண்குழந்தை யேனும் முலையுண்ணாதால்” என்று மொழிகின்றார். கடுநரகு - பொல்லாத நரகம்.
இதனால், சிவன் பெயரை விரும்பாதார் சென்றடையும் நரகின் கொடுமை கூறியவாறு.
|