35

      35. சிவன் திருவடியைச் சிந்தியாதவர்மேல் அன்பு கொள்ளுதலும் கூடாது. அன்பு செய்ய நினைப்பதும் தீது என அறிவுறுத்துகிறார்.

2002.

     கண்ணுதலே நின்தாள் கருதாரை நேசிக்க
     எண்ணுதலே செய்யேன்மற் றெண்ணுவனேல் - மண்ணுலகில்
     ஆமிடத்து நின்னடியார்க் காசையுரைத் தில்லையென்பார்
     போமிடத்தில் போவேன் புலர்ந்து.

உரை:

      கண்பொருந்திய நெற்றியையுடைய பெருமானே, நின் திருவடியை விரும்பி நினையாதவரோடு நட்புறவு கொள்ள நினைக்கவே மாட்டேன்; நினைப்பேனாயின் நிலவுலகின்கண் இயலுமிடத்து நின்னடியார்கட்கு உதவுவதாக ஆசைகூறிப் பின்பு முடியாது என மறுக்கும் கொடுமையாளர் போகும் நரகத்துக்கு வருத்தமுற்றுச் சென்று சேர்வேன். எ.று.

     நுதலிடத்துன்கண் ஞானக்கண் எனப்படுவது பற்றிக் “கண்ணுதலே” என எடுத்து மொழிகின்றார். நினைத்தற்குரிய திருவடியை நினையாமை பெருங் குற்றமாதலின், நினையாரோடு நட்புறுதல் அக் குற்றம் தன்கண் தோன்றிப் பெருகுதற்கு ஏதுவாமாகலின் “நின்தாட் கருதாரை நேசிக்க எண்ணுதலே செய்யேன்” என்றும், எண்ணினால் அக் குற்றம் நரகத்தில் புகுத்தும் என அஞ்சுவாராய் “எண்ணுவனேல்” என்றும் இயம்புகின்றார். அந்நரகம் யாதாம் என்றெழும் வினாவுக்கு விடைகூறுகின்ற வள்ளலார் “நின்னடியார்க்கு ஆமிடத்து ஆசையுரைத்துப் பின்பு இல்லையென்பார் போகும் நரகம்” என்று கூறுகின்றார். அந் நரகத்துக்குச் செல்லும்போதும் உடல் வெந்து புலர்ந்து மீளாத் துன்பத்துக் கிரையாகிப் புகுவேன் என்பாராய், “இல்லையென்பார் போமிடத்திற் போவேன் புலர்ந்து” எனப் புகல்கின்றார்.

     இதனால், சிவனடியை நினையாதார் நட்புறவும், அவர் அடியாரை ஏமாற்றும் செயலும் நரகத்திற் செலுத்துமெனத் தெரிவித்தவாறு.