36

      36. சிவன் திருவடியைச் சிந்தியாதவர்மேல் அன்பு கொள்ளுதலும் கூடாது. அன்பு செய்ய நினைப்பதும் தீது என அறிவுறுத்துகிறார்.

2003.

     அங்கணனே நின்னடிக்கோர் அன்பிலாரைச் சார்ந்தோர்தம்
     வங்கணமே வைப்பதினான் வைத்தேனேல் - அங்கணத்தில்
     நீர்போல் எனது நிலைகெடுக நிற்பழிசொற்
     றார்போ லழிக தளர்ந்து.

உரை:

      அருளாளனாகிய சிவனே, நின் திருவடிக்கண் அன்பில்லாரைச் சார்ந்தோர் உறையும் இடத்தில் நான் தங்குதற்கு விருப்பம் கொள்ளேன்; கொள்வேனாயின் சாக்கடையில் நிற்கும் நீர் கெடுவது போல எனது நிலை கெடுக; நின்னைப் பழித்துரைப்பவர் போல் யான் தளர்வுற்றுக் கெடுவேனாக. எ.று.

     அங்கணன் - அருளாளன். “அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க்கமுதன்” (திருவார்த்தை) என்று திருவாசகம் கூறுவது காண்க. அன்பில்லாரைச் சார்ந்தோரும் அன்பில்லாராதலின் அவருறையும் இடமும் ஆகாகதொன்று என்றற்கு “அன்பிலரைச் சார்ந்தோர்தம் வைப்பதில் நான் வங்கணம் வையேன்” என்று உரைக்கின்றார். வைப்பு; இங்கே அன்பு வைத்திருக்கும் இடத்தின்மேற்று; வங்கணம் - ஆசை; பற்றுமாம். அங்கணம் - கழிநீர் தங்கும் புறக்கடை; இது சாக்கடை யென்றும் வழங்கும். “அங்கணத்துள் உக்க அழிழ்தற்றால்” (குறள்) என்பர் திருவள்ளுவரும். அங்கணத்திற் கழிக்கப்பட்ட நீர் அழுக்குற்றுத் தீ நாற்றம் பெற்றுக் கெடுமென அறிக. அன்பிலாரைச் சார்ந்தார் விரும்பியுறையும் இடத்திற் பற்றுவைத்த குற்றத்திற்காக “என் நிலைகெடுக” என்றதனோடமையாது, சிவனைப் பழிப்பவர் எய்தும், தீப்பயனையும் உடன் கூறலுற்று, “நிற்பழி சொற்றார்போல அழிக தளர்ந்து” என்று உரைக்கின்றார். பழி சொற்றார் - பழித்துரைப்பவர். முன்னையதினும் இக்குற்றம் பெரிதென்பது தோன்ற, “தளர்ந்து அழிக” என்று மிகுந்துரைக்கின்றார்.

     இதனால், சிவன்பால் அன்பிலார், அவர்களைச் சார்ந்தார், சிவனைப் பழித்துரைப்பார் ஆகியோர் அடையும் தீப் பயன்களைத் தொகுத்துரைத்தவாறு.