37
37. சிவன் திருவடியைச் சிந்தியாதவர்மேல்
அன்பு கொள்ளுதலும் கூடாது. அன்பு செய்ய நினைப்பதும் தீது என அறிவுறுத்துகிறார்.
2004. பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருப்பாதத்
தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களைக் - கோவையிட்டுக்
கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்
ஓவுவா ராவ லுனை.
உரை: பூவெடுப்பதைக் கைவிட்டுப் புல்லெடுப்பாரைப் போல உன்னுடைய திருவடியை அடைவிக்கும் தேவர்களைக் கையகன்று வெவ்விய பிறவிகளை எய்துவிக்கும் சிறு தேவர்களை அவருடைய பெயர்களைக் கோவையாகத் தொடுத்துக் கூச்சலிடுவோர்கள் கூட்டத்திற் கூடமாட்டேன்; கூடுவேனாயின், சிவபிரானாகிய உன்னின் நீங்குவோருள் ஒருவனாகுவேன். எ.று.
பூவெடுக்கும் செயலினர், பூவெடுப்பதைக் கைவிட்டுக் கீழே முளைத்திருக்கும் புல்லையெடுப்பது நேரிய செயலன்மை தோன்ற, “பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போல்” என்று புகல்கின்றார். இச் செயல் சிவனுடைய திருவடியை அடைவிக்கும் தேவர்களாகிய சிவஞானச் செல்வர்களைப் பாடிப் பரவுவதை விட்டொழுத்துச் செத்துப் பிறக்கின்ற சிறு தெய்வங்களை தொண்டை கிழியக் கத்தித் துதிபாடுவது கூடாது; பாடுவோரைக் கூடுதலும் ஆகாது என்றற்குத் “திருப்பாத்த் தேவை விட்டுப் பிறவித் தேவர்களைக் கோவையிட்டுக் கூவுவார்” என்று இயம்புகின்றார். வேந்தரை வேந்து என்பதுபோலத் தேவரைத் தேவு என்பது மரபு. “நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்” (ஆரூர்) என்று நாவுக்கரசர் உரைப்பது காண்க. மற்றைத் தேவர்கள் மக்களைப் போல் பிறப்பிறப்புக் குள்ளானவராதலின், அவர்களை “வெம்பிறவித் தேவர்கள்” என்று விளம்புகின்றார். தாம் வீழ்வார் பிறர்க்கு ஊன்று கோலாகார்; அதுபோல் பிறந்திறக்கும் தேவர்கள் தம்மைப் பரவுவோர்க்குப் பிறவி யறுக்கும் பெரியராகார்; அவர்கள் பெயரைக் கோவைபடக் கோத்துப் பாடிக் கூக்குரலிடுவது வீண்செயல் என்பது விளங்கக் “கோவையிட்டுக் கூவுவார்” என்றும் கூறுகின்றார். அவரொடு கூடின், அக் கூட்டம் மனத்தை வேறுபடுத்தி வீண்செயலில் தோய்வித்து விலக்குவதுபற்றி, “கூடுவனேல் ஓவுவாராவல் உனை” என உரைக்கின்றார்.
இதனால், சிவனை விட்டுச் சிறு தெய்வங்களை வழிபடுவோர் கூட்டத்திற் சேரலாகாதென்பது விளக்கியவாறாம்.
|