38
38. சிவபெருமானுடைய திருவைந்தெழுத்தை ஓதாவழி யுளதாகும் குற்றம் கூறுகின்றார்.
2005. யாதோ கனற்கண் யமதூதர் காய்ச்சுகருந்
தாதோ தழற்பிழம்போ தானறியேன் - மீதோங்கு
நாட்டாதார்க் கொன்றை நதிச்சடையோய் அஞ்செழுத்தை
நாட்டாதார் வாய்க்கு நலம்.
உரை: மேலாங்கிய அன்றலர்ந்த தேன்பொருந்திய கொன்றையும் கங்கையும் அணிந்த சடையை யுடையாய், திருவைந்தெழுத்தை ஓதாதார் வாய்க்கு நலம் தருவது, நெருப்புக்கனலும் கண்ணையுடைய யமதூதர் பழுக்கக் காச்சிய இரும்போ, அனற்குழம்போ, யாதோ அறியேன். எ.று.
நெருப்புப் போல் சிவந்தொளிரும் கண்ணையுடையர் யமதூதர் என்பதனால் “கனற்கண் யமதூதர்” என்றும், நரகதண்டனை பெற்றார் வாயில் நீர் போல் உருக்கிய இரும்பின் நெருப்புக் குழம்பை ஊற்றுவர் என்பது பற்றி “காய்ச்சு கருந்தாதோ” என்றும் உரைக்கின்றார். கருந்தாது - இரும்பு . நெருப்பிலிட்டுப் பழுக்கக் காய்ந்த இரும்பு கம்பியை வாயிற் செருகுவர் என்பர். அனற்பிழம்பு - நெருப்புக் குழம்பு . கொன்றை மரம் நெடிதுயர வளர்வது பற்றி “மீதோங்கு கொன்றை” எனவும், உரிய காலத்தில் மலர்ந்த புதுப்பூ எனற்கு “நாள் கொன்றை” எனவும், “தாதார் கொன்றை” யெனவும் கூறுகின்றார். கொன்றை, கார்காலத்தே மலர்வது என அறிக. அஞ்செழுத்து - சிவாயநம என்னும் எழுத்தைந்து. நாளும் ஓதுதற்குரிய இவ்வெழுத்தைந்தையும் ஓதாதார் நரகத் துன்பம் எய்துவர் என்றற்கு “அஞ்செழுத்தை நாட்டாதார் வாய்க்கு நலம் கருந்தாதோ தழற் பிழம்போ யாதோ” என்று உரைக்கின்றார்.
இதனால், 'திருவைந்தெழுத்தை ஓதாதார் நரக மெய்திப் பெருந் துன்பம் எய்துவர்' என்று சொல்லி இகழ்ந்தவாறாம். மேலும், இன்னோரன்ன பாட்டுக்கள் இந்நூலெழுதும் காலத்தில் வள்ளற் பெருமான் சைவத்தில் மிக்க வெறி கொண்டிருந்தமையைப் புலப்படுத்துகின்றன.
|