39
39. சிவபெரிமானை நினையாதார் நெஞ்சு கல்லாமெனும் வள்ளற் பெருமான், அவரைச் சார்ந்தவர்க்கும்
அவரோடு உரையாட நேர்ந்தவர்க்கும் கல்லாம் என இப்பாட்டால் எடுத்துரைக்கின்றார்.
2006. என்னெஞ்சோர் கோயில் எனக்கொண்டோய் நின்நினையார்
தன்னெஞ்சோ கல்லாமச் சாம்பிணத்தார் - வன்நெஞ்சில்
சார்ந்தவர்க்கும் மற்றவரைத் தானோக்கி வார்த்தைசொல
நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு.
உரை: எளியேனுடைய நெஞ்சினையும் ஒரு கோயிலாகக் கொண்ட பெருமானே, நின்னை நினையாத மக்களின் நெஞ்சம் கல்லாகும்; சாகும் பிணங்களாகி அவர்களுடைய வன்மை கொண்ட நெஞ்சில் இடம் பெற்றவர்க்கும், அவர்களை நேரிற் கண்டு சொல்லாட நேர்ந்தவர்க்கும் நெஞ்சு கல்லாய்விடும். எ.று.
“நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்” (குறுந். பனைக்கை) என்று திருநாவுக்கரசர் உரைத்தலால், “என்நெஞ்சு ஓர் கோயில் எனக் கொண்டோய்” என்று கூறுகின்றார். சிவனை நினைந்து வழிபடுவோர் மனம் நீராய் உருகக் காண்பதால், நினையாதார் மனம் கல்லாதலைத் தெளிந்து, “நின்னினையார்தம் நெஞ்சோ கல்லாம்” என்று கட்டுரைக்கின்றார். உயிரோடிருந்தும் உண்மை யுணராமைபற்றி, “சாம்பிணத்தார்” என நினையாதாரை இகழ்கின்றார். அவர்கள் நினையாமையால் தாம் கல்லாம் நெஞ்சினராவதுடன், தம்மால் நினைக்கப்பட்டாரையும் கன்னெஞ்சராக் கெடுக்கின்றார் என்றற்கு “வன்னெஞ்சிற் சார்ந்தவர்க்கும் நெஞ்ச கல்லாகும்” என்றும், சொல்லாடுமிடத்து இருவர் நெஞ்சமும் இசைவது பற்றி, “வார்த்தை சொல நேர்ந்தவர்க்கும் நெஞ்சு கல்லாகும்” என்றும் உரைக்கின்றார். நிலத்தியல்பால் திரியும் நீர்போல் அவர் நெஞ்சமும் வன்னெஞ்சர் சேர்க்கையால் கல்லாம் என்பது கருத்தென அறிக.
இதனால், சிவனை நினைப்பவர் நெஞ்சு அப்பெருமானுக்குக் கோயிலாதலும்,. நினையாதார் நெஞ்சும் அவர்களைச் சேர்ந்தார் சொல்லாடினார் நெஞ்சங்களும் கல்லாதலும் காட்டியவாறாம்.
|