40

      40. சிவன்பால் அன்புடையவர் அவனைப் புகழ்ந்துரைக்கும் நன்சொற்களில் உண்டாகும் இன்பம் உரைத்தற்கு அரிய உயர்வுடையது  என்று இப் பாட்டின் வாயிலாக உரைக்கின்றார்.

2007.

     வெள்ளமுதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின்
     உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் - கள்ளமிலா
     நின்னன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னைஇனி
     என்னென்ப தையா இயம்பு.

உரை:

     பாலும் தேனும் பெரிய கரும்பும் முக்கனிகளின் உள்ளிருந்து பிழியப்படும் அமுதம் தெள்ளிய தேவரமுதும் ஒன்றோடொன்று ஒவ்வாது; அற்றேல், கள்ளமில்லாத நின் அன்பர் எய்தும் புகழிடத்து மிக்குறும் இனிமையை இனி என்னென்று உரைப்பது, ஐயனே, சொல்லுக. எ.று.

     பசுவின் தூய பால் இங்கே 'வெள்ளமுது' எனப்படுகிறது. முற்றிய கரும்பு வியன்கரும் பெனப்படும். முக்கனி - மா, பலா, வாழை. நன்கு கனிந்தவிடத்து அவற்றின் உள்ளிருந்தொழுகும் சாறு “முக்கனியின் உள்ளமுது” என்று உரைக்கப்படுகிறது. தெரித்து மொழியாது தெள்ளமுது என்றலின் தேவரமுது கொள்ளப்பட்டது. ஒவ்வொன்றும் தனித்தனி நிறமும் சுவையும் உடைமையின் “ஒவ்வா”தென உரைக்கின்றார். மெய்யான அன்புடையா ரென்றற்குக் “கள்ளமிலா அன்பர்” என்று கூறுகின்றார். அவரது நிலைத்த புகழை நினைக்குமிடத்தும் உரைக்கு மிடத்தும் புத்தின்பம் சுரந்து மிகுவது தேர்ந்து, “அன்பர்தம் புகழின் நீள்மதுரம்” என்றும் அதன் சுவை வேறுபடக் கண்டு, “இனி என்னென்பது” என்றும், “ஐயா இயம்பு” என்றும் விளம்புகின்றார்.

     இதனால், சிவன்பா லன்புடையார் புகழ் பயக்கும் இன்பம் உரைக்கலாகாத உயர்வுடைய தென்றவாறு.