41
41. வடலூர்
வள்ளலார்க்கு ஞானசம்பந்தர்பால் ஈடுபாடு மிகுந்துளது. Êஞானசம்பந்தர் திருமயிலையில் எலும்பைப்
பெண்ணாக்கிய வரலாற்றை அன்பர்கள் சிறப்பாகப் பேசுவதைக் காண்கின்றார் வள்ளலார். ஞானசம்பந்தர்
வேகாத எலும்பைக் கொண்டு சிவனது திருப்பெயரைப் பாடிப் புகழ்ந்து பெண்ணாக்கினார். சிவன் பெயரினும்
ஞானசம்பந்தருடைய திருப்பெயர் வன்மைவாய்ந்தது; இறந்த பெண்ணினது வெந்த சாம்பரைக் கொண்டு வைத்து
ஞானசம்பந்தர் என்ற பெயரை ஓதினாலே அப் பெண் உருவாகி வருவாள் என உரைக்கலுற்று, இப் பாட்டைப்
பாடுகின்றார்.
2008. பண்ணாலுன் சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு
பெண்ணான தென்பார் பெரிதன்றே - அண்ணாஅச்
சைவவடி வாம்ஞான சம்பந்தர் சீருரைக்கில்
தெய்வவடி வாஞ்சாம்பர் சேர்ந்து.
உரை: அண்ணலே, உன் சிறப்புக்களை ஞானசம்பந்தர் பண்ணமைந்த பாடல்களாற் சொன்னவளவில், வெண்மையான எலும்புக்கூடு பெண்ணுருக் கொண்டது என்று சொல்லுகின்றார்கள்; அது பெரிதன்று; சைவத்தின் உண்மை வடிவமான அந்த ஞானசம்பந்தருடைய சிறப்பை எடுத்து மொழிந்தால், எரிந்த சாம்பரே ஒன்று சேர்ந்து தெய்வ வடிவாகுமே, இதற்கு யாது சொல்வது? எ.று.
அண்ணால் எனற்பாலது அண்ணா என வந்தது. பண்ணமைந்த பாட்டுக்களையே ஞானசம்பந்தர் பாடினமையின், “பண்ணால்” என்றும், பாட்டுக்கள் அத்தனையும் சிவனுடைய திருப்புகழையே மொழிந்தமையின், “உன் சீரினை” என்றும், ஞானசம்பந்தரை அடையின்றிச் சம்பந்தர் என்பதும் உண்மையின் “சம்பந்தர் சொல்” என்றும் வள்ளலார் உரைக்கின்றார். தசை,. நரம்பு, தோல் முதலியனவின்றி வெற்றெலும்புக்கு கூடே யிருந்தமையின் “வெள்ளெலும்பு” என்று சிறப்பிக்கின்றார். பெண்ணுருவம் கொண்ட நிகழ்ச்சியைப் “பெண்ணானது என்பார்” என்றும், அக்கூற்றினும் பெருமைமிக்கது வேறுளது என்றற்கு “அது பெரிதன்றே” என்றும் பேசுகின்றார் ஞானசம்பந்தரின் திருவுருவம் சைவத்தின் தனிப்பெரும் வடிவம் என்றற்குச் “சைவ வடிவாம் ஞானசம்பந்தர்” என்று இயம்புகின்றார். சிவனுடைய சீர் என்பைப் பெண்ணாக்கியதெனின், திருஞானசம்பந்தர் சீர் சாம்பரைத் தெய்வவடிவாக்கும் சிறப்புடைதென்றற்குச் “சாம்பர் சேர்ந்து தெய்வ வடிவாம்” என விளம்புகின்றார்.
இதனால், சிவனது சீரினும் அவன் சீர்பாடிய ஞானசம்பந்தரின் சீர் சிறப்புமிகவுடையது எனப் புகழ்ந்தவாறு.
|