42
42. திருஞானசம்பந்தர் திருமணத்தின்
போது மணமனையில் தோன்றிய பேரொளியில் மணங்காண வந்திருந்தோர் அனைவரும் கலந்து சிவப்பேறு
பெற்ற வரலாறு வள்ளலார் திருவுள்ளத்தில் ஓர் அங்கலாய்ப்பை யுண்டு பண்ணுகிறது. அத் திருமணத்தில்
யான் ஒரு சுமை எடுக்கும் ஆளாய் இருந்திருந்தால் எனக்கும் அப்பேறு கிடைத்திருக்கும்; இன்று நான்
அது நினைந்து வருந்துகிற நிலைமை தோன்றியிராது எனப் பாடுகின்றார்.
2009. எங்கோவே யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில்
அங்கோர் பொருட்சுமையாள் ஆனேனேல் - இங்கேநின்
தாள்வருந்த வேண்டேன் தடைப்பட்டேன் ஆதலினிந்
நாள்வருந்த வேண்டுகின்றேன் நான்.
உரை: எங்கள் தலைவனாகிய சிவபெருமானே. சீர்காழியில் தோன்றிய எங்கள் பெருமானாகிய ஞானசம்பந்தருடைய திருமணத்தில் யாதேனுமொரு பொருளைச் சுமக்கும் ஆளாய் இருந்திருப்பேனாயின், இப்போது நின் திருவடி வருந்தப் பற்றிக் கொண்டு வேண்டுதல் செய்யேன், அப்போது தடைப்பட்டுப் போனேன்; அதனால். இந்நாளில் நின் மனம் வருந்துமாறு வேண்டுவே னாகின்றேன். எ.று.
கோவே - தலைவனே. புகலி - சீர்காழிப் பதிக்குரிய பெயர்கள்ப் பலவற்றுள் ஒன்று. 'எம்பெருமான்' என்றது, திருஞானசம்பந்தப் பெருமானை. அவர் திருமணத்துக்குச் சென்றிருந்த அனைவரும் சிவப்பேறு பெற்றார் என்பது வரலாறு. அது நினைந்து அந்நாளில் திருமணத்துக்குச் சென்றிருந்த பலருள் சுமை தாங்கும் ஆளாகச் சென்றிருந்தால்கூட யான் சிவகதி எய்தியிருப்பேன்; இப்போது உன் திருவடி வருந்துமாறு பற்றிக் கொண்டு பாடுகிடக்க வேண்டியிராது என்றற்கு, “இங்கே நின் தாள் வருந்த வேண்டேன்” என்றும், என் வினையால் அன்று அங்கிருக்கும் பேறு பெறாதவாறு தடைபட்டொழிந்தேன் என்பார், “தடை பட்டேன்” என்றும் உரைக்கின்றார், பொருட் சுமையாள் - திருமணத்துக்கு வேண்டும் பொருள்களில் ஒன்றைச் சுமந்து வரும் ஆள். இப்போது வேண்டிக் கொள்வதில் எனக்கு வருத்தமில்லையாயினும்., இடையறாது வேண்டுவதால் உன் திருவுள்ளத்துக்குதான் வருத்தம் உண்டாகிறது என்றற்கு “இந் நாள் வருந்த வேண்டுகின்றேன் நான்” என்று சொல்லுகின்றார்.
இதனால், திருஞானசம்பந்தர் திருமணத்துக்கு வந்திருந்தோர், அனைவரும் சிவப்பேறு பெற்றது நினைந்து ஆராமையுற்று அவலித்தவாறு.
|