43

      43. சிவபெருமானைத் தொண்டர்க்குத் தொண்டன் என்று சொல்லித் துதிபாடுவதுண்டு . அது கேட்கும் வள்ளலார், அப் பெயர் குறித்துச் சிந்தனை செய்து, சிவபிரானுக்கு அப் பெயர் எய்துதற்குச் சீரியதோர் காரணமுண்டு.  திருப்பைஞ்ஞீலிக்குத் திருநாவுக்கரசர் சென்றபோது அவர் பசியால் வருந்தினமை கண்டு சிவன் கட்டுச்சோறு கொணர்ந்தளித்துத் தொண்டர் பசிபோக்கும் அருள்தொண்டு செய்தார் என்பதை நினைந்து, அதனை வியந்து பாடி இன்புறுகின்றார்.

2010.

     பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு
     நாவுக் கரையரெனு நன்னாமம் - மேவுற்ற
     தொண்டர்க்கு நீகட்டுச் சோறெடுத்தாய் என்றறிந்தோ
     தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல்.

உரை:

     பூவின்கண் உயர்ந்த அரசரும் வானத்துயர்ந்த தேவர்களும் போற்றிப் புகழும் திருநாவுக்கரசர் என்ற நற்பெயர் பூண்ட சிவத்தொண்டர்க்குச் சிவனே, நீ கட்டுச்சோறு கொணர்ந்தளித்தாய் என்பது தெரிந்ததுதான் உலகவர்,. தொண்டர்க்குத் தொண்டன் என்ற சொல்லைச் சொல்லுகிறார்களோ, சொல்லுக. எ.று.

     திருநாவுக்கரசரின் சிறப்பறிந்து தொண்டை நாடாண்ட பல்லவ வேந்தன் பாராட்டிப் பரவியதுபற்றிப் “பூவுக்கரையர் போற்று திருநாவுக்கரையர்” என்று கூறுகின்றார். நாடாளும் மன்னன் நீற்றறையிலிட்ட போதும் கல்லொடு பிணித்துக் கடலில் இட்டபோதும் ஊறு சிறிதுமின்றி உய்ந்தமை கண்டு உயர்ந்த தேவர்களும் போற்றியதனால், “வான்புங்கவரும் போற்று திருநாவுக்கரையர்” என்று புகழ்கின்றார். சென்று பரவிய திருக்கோயில்தோறும் உழவாரத் தொண்டு புரிந்தமை பற்றி, திருநாவுக்கரசர்க்குத் “தொண்டர்” என்ற பெயர் சிறப்புற அமைவதாயிற்று. அவரும் ஒரு திருப்பதியத்தில் தொண்டர்க்குத் தொண்டராவது புண்ணியமென்று நினைந்து சொல்லி, “மாற்றிடமின்றி மனைதுறந் தல்லுணா வல்லமணர், சொல் திடமென்று துரிசு பட்டேனுக்கும் உண்டு கொலோ, விற்றிடம் வாங்கி விசயனொன்றொரு வேடுவனாய்ப் புற்றிடங் கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே” (குலம்பலம்) என்று பாடுவது காண்க. திருப்பைஞ்ஞீலிக்குப் பசித்து வந்த நாவுக்கரசர்க்கு இறைவன் கட்டுச்சோறு கொண்டுவந்தளித்த வரலாறு இங்கே குறிக்கப்படுகிறது. தொண்டர்க்குத் தொண்டராய்ச் சிவனே சோறு கொணர்ந்தது, தொண்டர்க்குத் தொண்டு செய்வதால் உண்டாகும் பெருமைக்கு எல்லையாய் விளங்குகிறது. மேலும், தொண்டர்க்குத் தொண்டர் என்பது சிவனுக்குரிய சிறப்புப் பெயராகவும் மேன்மையுறுகிறது.

 இதனால், தொண்டர்க்குத் தொண்டர் என்னும் சொற்பொருள் விளக்கியவாறாம்.